நேற்று கானொளி வாயிலாக கட்சி உறுப்பினர்களை சந்தித்து, வெற்றிகரமாக பொதுக்குழு நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதன் ஒருபகுதியாக பேசியிருந்தார். தனது உரையில்,

``துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் கட்சியில் படிப்படியாக உயர்ந்து தற்போதைய நிலையை எட்டியுள்ளனர். 9 முறை சட்டமன்றத்துக்கு சென்றுள்ள துரைமுருகன் ஒரு சூப்பர் ஸ்டார். சட்டமன்றத்தில் ஸ்டாராக மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருகிறார். துரைமுருகனின் கனிவும், டி.ஆர்.பாலுவின் கண்டிப்பும் திமுகவின் வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும்.

அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோரது பொறுப்பு துரைமுருகன் தோளில் சுமத்தப்பட்டுள்ளது. பல்வேறு பதவிகளை வகித்த துரைமுருகன் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். திமுகவின் போர்வாளாக திகழ்கிறார் டி.ஆர்.பாலு. கருணாநிதிக்காக் உயிரையும் கொடுக்கக்கூடிய திமுகவின் போர்வாள் டி.ஆர்.பாலு.

மிசா காலத்தின் போது கைதாகி எங்களுடன் சிறையில் இருந்தவர் டி.ஆர்.பாலு, டி.ஆர்.பாலு 6 முறை மக்களவை எம்.பி,. 3 முறை மத்திய மந்திரியாக இருந்தவர். வெட்டி வா என்றால் கட்டி வரக்கூடியவர் டி.ஆர்.பாலு என கருணாநிதி குறிப்பிடுவார். துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் திடீரென உயரத்தை எட்டவில்லை.

ஆ.ராசா 5 முறை எம்.பி. பொன்முடி 5 முறை எம்.எல்.ஏ என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆ.ராசாவும், பொன்முடியும் திமுகவின் அடிப்படை கொள்கைகளில் உறுதியாக இருக்க கூடியவர்கள். கட்சியின் வளர்ச்சிக்கு தங்களது மொத்த திறமையும் பயன்படுத்துங்கள்.

இன்னும் 8 மாதங்களில் ஆளுங்கட்சியாக திமுக மாறும். ஆளுங்கட்சியினர் மீது உள்ள குறைபாடுகளை எழுதுபவர்களே ஊடகங்கள், ஆனால் தமிழகத்தில் எதிர்க்கட்சிகளை பற்றியே அதிகம் ஊடகங்கள் எழுதுகின்றன. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. 5 மாதங்கள் கொரோனாவால் கழிந்து விட்டது . இனி கட்சியினர் விரைந்து செயல்பட வேண்டும். நாம் தான் ஆட்சிக்கு வர போகிறோம்"

என்று பேசியிருந்தார் ஸ்டாலின்.

எட்டு மாதங்களில் ஆட்சியை பிடிப்போம் என்ற ஸ்டாலினின் கருத்து, தமிழக அரசியலில் மிக முக்கியமான கருத்தாக பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக, மதுரையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்தபோது கூறியதாவது:

``8 மாதங்கள் அல்ல, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திமுகவால் ஆட்சிக்கு வர முடியாது. 8 மாதங்களில் தேர்தல் வரும்போது அதிமுகவுக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள்" என்றார்.

இதுபற்றி பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ``திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் போதுமா? மக்கள் மனதில் என்ன தீர்மானம் இருக்கிறது என்று பார்க்கவேண்டும் என்று கூறினார். 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே மக்களின் தீர்மானம்" என்று கூறியுள்ளார்.