தமிழகத்தில் வரும் 28 ஆம் தேதி அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று, அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக இந்த முறை ஆட்சியை பிடித்திருக்கிறது. அதன் படி, தமிழ்நாட்டின் 23 வது முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார்.

திமுக கடந்த காலங்களில் வாங்கிய கெட்ட பெயர்களை போக்கும் வகையில் புதிதாக முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் திறம் பட ஆட்சி செய்து வருகிறார் என்னும் நற்பெயர் ஒரு பக்கம் பெற்றிருப்பதாகவே, அவர் ஆட்சிக்கு வந்து 50 வது நாள் அன்று பரபலான கருத்துக்கள் எழுந்தன. 

முக்கியமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக உதயசந்திரன், உமாநாத், எம்.எஸ்.சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த செயல்பாடு ஒட்டு மொத்த தமிழர்களையும், சமூக ஆர்வலர்களையும், தமிழ் உணர்வாளர்களையும் புருவம் உயர்த்தி மிகவும் ஆச்சரியமாகப் பார்க்க வைத்தது.

மிக முக்கியமாக, ஐ.ஏ.எஸ் அதிகாரி, எழுத்தாளர், படைப்பாளர், தன்னம்பிக்கை பேச்சாளர் என்று, பன்முகத்தன்மை கொண்ட தமிழ் ஆளுமையாக வலம் வந்த இறையன்பு ஐ.ஏ.எஸ் தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இது, தமிழக அரசுக்கும், தமிழக மக்களும் கூடுதல் பலமாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

அதே போல், மாநில வளர்ச்சி மேம்பாட்டுக் குழு உறுப்பினர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமனம் செய்தது அனைவரையும் அதிகம் கவனிக்க வைத்தது. இந்த குழுவில், பெரும்பாலும் இயற்கை ஆர்வலர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் இடம் பிடித்து இருக்கிறார்கள். குறிப்பாக, சித்த மருத்துவர் கு. சிவராமன், பத்மஸ்ரீ முனைவர் நர்த்தகி நடராஜ் ஆகியோரை நியமித்தது, பொதுமக்களிடம் அதிகமான கவனத்தை ஈர்த்தது.

குறிப்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பொருளாதார ஆலோசனை வழங்க நோபல் பரிசு பெற்ற நிபுணர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்பட 5 பேர் கொண்ட குழு நிமிக்கப்பட்டது, தமிழ்நாட்டை திரும்பிப் பார்க்க வைத்தது.

அத்துடன், கொரோனாவை கட்டுப்படும் விதமாக அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ஆட்சிக்கு வந்து என்ன செய்தோம்?” என்று பேசி, அனைத்து தரப்பினரையும் அதிர வைத்தார். 

இப்படியான தமிழக அரசியல் சூழலில் தான், உட்கட்சி குழப்பத்தால் சிக்கித் தவிக்கும் அதிமுகவிற்கு, தமிழக அரசு கடந்த மாதம் வெளியிட்ட சிஏஜி அறிக்கையால் மேலும் சிக்கலில் மாட்டிக்கொண்டதாகவும் விமர்சனம் எழுந்தது. 

அதன் தொட்ச்சியாக, முன்னாள் அதிமுக போக்குவரத்து துறை அமைச்சரான எம்.ஆர் விஜயபாஸ்கர் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த ஜூலை 21 ஆம் தேதி விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் சகோதரர் ஆகியோர் மீது சொத்துகுவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில், எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு துணையாக அதிமுக இருக்கும் என்று, இபிஎஸ் - ஓபிஎஸ் இணைந்து அறிக்கை வெளியிட்டனர்.

திமுகவை கண்டித்து, தமிழகத்தில் வரும் 28 ஆம் தேதி அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று, அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக, எடப்பாடி பன்னீர்செல்வம், ஓ.பன்னீர்செல்வம் இருவரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், “தமிழகம் முழுவதும் வரும் 28 ஆம் தேதி அதாவது வரும் புதன் கிழமை திமுக அரசுக்கு எதிராக, அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக” கூறியுள்ளனர்.

“சட்டமன்ற தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை” என்றும், அந்த அறிக்கையில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளனர்.

“நீட்தேர்வு, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு போன்றவற்றையும் நிறைவேற்றவில்லை என்றும், அதிமுகவை அழிக்கலாம், ஒழித்து விடலாம் என கனவு கண்டால் அது பகல் கனவாகவே முடியும்” என்றும், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைந்து விமர்சித்து உள்ளனர்.

இதனிடையே, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, முதல் முறையாக தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.