அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சற்று முன்பாக காலமானார். 

முன்னாள் அமைச்சரும், அதிமுக அவைத்தலைவருமான 80 வயதான மதுசூதனன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். 

இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து, அவர் உடல் நலம் தேறிய நிலையில், அவர் வீடு திரும்பினார்.

அதன் பிறகு, அவருக்கு தற்போது 80 வயது ஆவதால், இந்த வயது முதிர்வு காரணமாக அவர் அரசியல் பணிகளில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்தார். அதே நேரத்தில், சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் அவர் ஓய்வில் இருந்து வந்தார்.

எனினும், அதிமுகவின் அவைத் தலைவராகவும் மதுசூதனன் தொடர்ந்து வந்தார். அதற்குக் காரணம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, “மதுசூதனன் உயிரோடு இருக்கும் வரையில், அவர் தான் அதிமுகவின் அவைத் தலைவராக” செயல்படுவார் என்று, ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன் படியே, மதுசூதனன், தனது உடல் நலன் மற்றும் வயதையும் பொருட்படுத்தாமல், அதிமுகவின் அவைத் தலைவராகத் தொடர்ந்து வந்தார்.

இப்படியான சூழலில் தான், மதுசூதனன் உடல் நிலை திடீரென்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு மோசம் அடைந்தது. இதனால், அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டார். அத்துடன், அவர் அங்க தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மேலும், அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக, அவர் 24 மணி நேரமும் மருத்துவர்களின் தொடர் கட்டுப்பாட்டில் இருந்து வந்தார். 

மதுசூதனன் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்த காரணத்தால், கடந்த மாதம் 20 ஆம் தேதி அன்று, மதுசூதனன் உடல்நலம் குறித்து விசாரிக்க எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஒரே நேரத்தில் அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்ததால், மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணத்திற்காக, அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று பகல் 3.42 மணிக்கு காலமானார். அவருக்கு, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான மதுசூதனன், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில், கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை கைத்தறித்துறை அமைச்சராக இருந்து உள்ளார். 

அத்துடன், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சட்டப்பேரவை உறுப்பினர் ஓ. பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் தொடங்கிய போது, அவருக்கு முதலில் ஆதரவளித்த அதிமுக தலைவர்களில் முக்கியமானவர் மதுசூதனன் என்பது குறிப்பிடத்தக்கது.