சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் அதிமுக அரசானது தொடர்ந்து செயல்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முத்துராமலிங்கத் தேவரின் 113ஆவது ஜெயந்தி, 58ஆவது குருபூஜை நிகழ்வு இன்று (அக்டோபர் 30) அவரின் நினைவிடம் அமைந்துள்ள பசும்பொன் கிராமத்தில் நடைபெறுகிறது. ஒவ்வொரு வருடமும் தலைவர்கள், பசும்பொன் சென்று முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அண்ணா சாலை நந்தனம் சந்திப்பில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், 'சென்னையில் தற்போது பெய்துவரும் கனமழையின் காரணமாக,  13 இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கையாக 109 இடங்களில் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. திமுக-வின் ஆட்சியில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் வகையில் 7.5% இட ஒதுக்கீடு தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 7.5% உள் ஒதுக்கீடு தொடர்பான அரசாணையில் எந்த பிரச்னையும் இல்லை. சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் அதிமுக அரசு தொடர்ந்து செயல்படும்' என்று அவர் தெரிவித்தார்.