அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

கோவையைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். பின்னர், இது தொடர்பாகத் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அதிமுகாவை கடுமையாக விமர்சித்து வந்தார்.

ADMK former MP KC Palanisamy arrested

இதனிடையே, அதிமுகவில் தான் இன்னும் இருப்பதாக கே.சி.பழனிசாமி கூறி வந்ததாகத் தெரிகிறது. மேலும், அதிமுக கட்சியின் பெயரில் இணைய தளம் நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, முத்து கவுண்டன் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கந்தவேல், சூலூர் காவல்நிலையத்தில் கே.சி.பழனிசாமி நடத்தி வரும் போலி இணைய தளம் தொடர்பாகப் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் இந்தியத் தண்டனை சட்டத்தின்கீழ் ஏமாற்றுதல், நம்பியவர்களை ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், தவறான ஆவணத்தை உருவாக்குதல், பொய் ஆவணம் உருவாக்கி ஏமாற்றுதல், ஏமாற்றத் திட்டமிட்டு ஆவணம் உருவாக்குதல், சொத்து குறியீட்டைத் தவறாகப் பயன்படுத்துதல், தவறான சொத்து குறியீட்டைப் பயன்படுத்துதல், சொத்து அடையாளத்தை உருவாக்கும் கருவியை வைத்திருந்தல் உள்ளிட்ட மொத்தம் 11 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 

இதனையடுத்து, அதிகாலையில் அவரது வீட்டிற்குச் சென்ற போலீசார், அதிரடியாக கே.சி.பழனிசாமியை கைது செய்தனர். பின்னர், சூலூர் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதனால், அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.