“தமிழ்நாடு “மின் வாரியத்தை அதிமுக சீரழித்து விட்டது” என்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பகிரங்கமாக குற்றச்சாட்டி உள்ளார்.

தமிழக விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத் தொடக்க விழாவானது, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்ச்சி நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக” குறிப்பிட்டார். 

“தமிழக அமைச்சர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு பணியாற்றுகின்றனர் என்றும், ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றனர்” என்றும், அவர் கூறினார்.

“விவசாயிகளின் முகத்தில் சிரிப்பைக் காணும் வகையில் ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கப்படுகிறது என்றும், தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சி உழவர்களுக்கானது” என்றும், பெருமிதத்தோடு குறிப்பிட்டார். 

அத்துடன், “4.5 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்த நிலையில், முதல் கட்டமாக ஒரு லட்சம் பேருக்கு இலவச இணைப்பு தர திட்டமிடப்பட்டு உள்ளதாகவும்” அவர் தெரிவித்தார். 

மேலும், “விவசாயிகளுக்கு ஒரு லட்சம் புதிய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை 4 மாதத்தில் நிறைவேற்றத் தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகவும்” அவர் கூறினார்.

“கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் விவசாயிகளுக்கு மொத்தமாகவே 2 லட்சம் மின் இணைப்புகள் தான் வழங்கப்பட்டுள்ளன என்றும், ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் ஒரு லட்சம் இணைப்புகள் வழங்கப்படுகிறது” என்றும், முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, “கடந்த அதிமுக ஆட்சியில், தமிழ்நாடு மின்வாரியத்தை அவர்கள் சீரழித்து உள்ளனர்” என்றும், முதலமைச்சர் பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார்.

“ஆனால் 4 மாதத்திலேயே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு தரும் திட்டத்தைத் தொடங்கி உள்ளோம் என்றும்,  3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக மத்திய அரசை எச்சரிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்” என்றும், அவர் தெரிவித்தார். 

மேலும், “விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் புதிய மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன என்றும், இந்தியாவிலேயே விரைவாகச் செயல்படும் அரசு தமிழக அரசு தான்” என்றும், அவர் பெருமையோடு கூறினார். 

அதே போல், “மின்சார வாரியத்தைச் செழிப்பாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும், திருவாரூரில் முதல் சூரிய சக்தி மின் பூங்கா அமைக்கப்பட உள்ளது” என்றும், அவர் சுட்டிக்காட்டினார். 

“புதிய மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகள் மின்சாரத்தைத் தேவைக்கேற்ப சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்” என்றும், விவசாயிகளை முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். 

இந்த விழாவில், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புக்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.