“திமுக கூட்டணியை வீழ்த்த கங்கை ஜலமாக இருந்தாலும், சாக்கடை ஜலமாக இருந்தாலும் ஏற்க வேண்டும்” என்று, சசிகலாவுடன் அதிமுக இணைவது குறித்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி சூசகமாகப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சசிகலா இன்னும் சில நாட்களில் விடுதலையாக உள்ள நிலையில், அதிமுக பொதுக் குழுவும் கடந்த வாரம் கூடியது. இதனால், அதிமுகவில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று, அக்கட்சியில் மிகப் பெரிய எதிர் பார்ப்பும் எகிறச் செய்து உள்ளது. 

அதே நேரத்தில், பொதுக் குழு கூடுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, “பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளியில் வந்தாலும், அதிமுக வில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது” என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதிப்படத் தெரிவித்து இருந்தார்.

ஆனால், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும், “அதிமுக - பாஜக கூட்டணிக்கு எனது ஆதரவு உண்டு” என்று, சசிகலாவை அறிக்கை வெளியிட வைக்க அறிவுறுத்தி உள்ளதாகவும், டெல்லியில் இருந்து வந்த தகவல்கள், கடந்த வாரம் தமிழ்நாட்டை பரபரப்பாக்கின.

இந்த நிலையில் தான், துக்ளக் இதழின் 51 வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நேற்று நடைபெற்றது. இதில், பாஜக தேசிய தலைவர் 

ஜே.பி. நட்டா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில், பாஜக மாநில தலைவர் எல்.முருகன், துணை தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பாஜகவின் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர்.

அப்போது, இந்த விழாவில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் நிகழ்ந்த மாற்றங்களாலேயே துக்ளக் மீண்டது என்றும், அதிமுகவுக்கு யாரெல்லாம் தொல்லை கொடுத்தார்களோ அவர்களாலேயே துக்ளக் வளர்ந்தது” என்றும், குறிப்பிட்டார்.

“காங்கிரஸ் கட்சி மற்றொரு திமுக போல் மாறி உள்ளது என்றும், அதனால் பாஜகவுக்கு தமிழ் நாட்டில் வாய்ப்பு உள்ளது” என்றும், அவர் கூறினார்.

முக்கியமாக, “யார் தேசியத்தை நேசிக்கிறார்களோ, அவர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க விரும்பும் சூழல் நிலவுவதாகவும்” தேசத்தோடு, கட்சியை ஒப்பிட்டுப் பேசினார். 

குறிப்பாக, “திமுக கூட்டணியை வீழ்த்த கங்கை ஜலமாக இருந்தாலும், சாக்கடை ஜலமாக இருந்தாலும், அதனை நாம் ஏற்க வேண்டும்” என்று, சசிகலாவுடன் அதிமுக இணைவது குறித்து குருமூர்த்தி மிகவும் சூசகமாகக் கருத்து தெரிவித்தார்.

மேலும், “வீடு பற்றி எரியும் போது கங்கை நீருக்கு காத்திருக்கக் கூடாது எனக் கூறிய அவர், திமுகவை விலக்க வேண்டும் என்றால் சசிகலா உள்ளிட்டோர் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும்” என்றும், அவர் சூசகமாகக் கூறினார்.

அத்துடன், “முதல்வர் பழனிசாமிக்கு ஆளுமை உள்ளது என்றும், அதிமுக இல்லை என்றால் தமிழகத்தில் ஆன்மிகமும், தேசியமும் இருந்திருக்காது” என்றும், அவர் தெரிவித்தார்.

“தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் வளர்வதற்கான நேரம் வந்து விட்டதாகவும், அடுத்த 4 ஆண்டுகளில் பாஜக மிகப் பெரிய சக்தியாக மாற வாய்ப்பு உள்ளது என்றும், அவர் குறிப்பிட்டுப் பேசினார். 

“அதிமுக - திமுக இரண்டும் ஊழல் கட்சிகள் என்று விமர்சித்த அவர், அதிமுக தேசிய வாதத்தை ஏற்பதாகவும், திமுக இந்து விரோத கட்சி” என்றும், அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். 

அவரைத் தொடர்ந்து பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, “தமிழ் நாடு சிறந்த கலாச்சாரங்களைக் கொண்ட மாநிலம்” என்றும், புகழாரம் சூட்டினார். 

“பிரதமர் மோடியின் திட்டங்கள் தமிழ் நாட்டில் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கம், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவை 
அமல்படுத்தப்பட்ட பிறகும் காஷ்மீர், லடாக், அருணாச்சல பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளதாகவும்” அவர் கூறினார்.