கடந்த சில நாட்களாகவே மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14-ம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தன் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்தின் இறப்பு, மொத்த இந்தியத் திரையுலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதேபோல், கன்னட நடிகையும், பிக்பாஸ் 3ல் கலந்து கொண்டவருமான மாடல் ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயன்றார்.

இந்த நிலையில் தற்போது, நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றதால் தமிழ் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஃப்ரெண்ட்ஸ், பாஸ் என்கிற பாஸ்கரன், மீசையை முறுக்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் விஜயலட்சுமி. இவர் திருவான்மியூரில் வசித்து வருகிறார். இவர் நேற்று அளவுக்கு அதிகமான பிபி மாத்திரைகளை உண்டு தற்கொலைக்கு முயன்றதால், தற்போது, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் இவர், அடிக்கடி பல்வேறு வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார். பொருளாதார ரீதியாக இவர் பாதிக்கப்பட்டதாகவும், நடிகர் ரஜினிகாந்த் உதவிகள் செய்ததாகவும் செய்திகள் வெளியாகின. அதற்கு நன்றி தெரிவித்தும் நடிகை விஜயலட்சுமி வீடியோ பதிவிட்டார்.  மேலும், இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் தன்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டதாக விஜயலட்சுமி தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார். சீமான் பற்றிய சில வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார்.  இதனாலேயே சீமானின் ஆதரவாளர்கள் இவரைக் குறித்து பல்வேறு வகையில் பேசி வந்தனர். 

இந்நிலையில், தற்போது தற்கொலை முயற்றி செய்வதற்கு முன், விஜயலட்சுமி ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், 'இது என்னுடைய கடைசி வீடியோ. கடந்த 4 மாதமாகச் சீமானும், சீமான் கட்சியினரும் கொடுத்த அழுத்தம் காரணமாக அதிக மன அழுத்தத்தில் உள்ளேன். ரொம்ப மல்லுக்கட்டிட்டு வாழணும்னு முயற்சித்தது எனது அம்மா, அக்காவுக்காகத்தான். நேற்று முன்தினம் ஹரிநாடார் பேசி ரொம்ப அசிங்கப்படுத்தியது, மீடியாவில் என்னை அசிங்கப் படுத்தியது போதும் என்றாகிவிட்டது. 
இன்னும் சில மணிநேரங்களில் நான் உயிருடன் இருக்க மாட்டேன். நான் கர்நாடகாவில் பிறந்த ஒரே காரணத்திற்காக சீமான் என்னை ரொம்ப டார்ச்சர் பண்றது சரியல்ல. இதற்கு மேல் என்னால் தாங்க முடியாது. ஹரி நாடார் ஜாதி பற்றிப் பேச வந்தார். சீமானுக்கு இந்த வாழ்க்கையைப் பிச்சை போட்ட பிரபாகரனின் ஜாதியைச் சேர்ந்த பெண் நான். பிள்ளைமார் கம்யூனிட்டி. அந்த வாழ்க்கையைப் பிச்சை எடுக்கும்போது எல்லாம் சீமானுக்கு எந்த ஜாதி என்று தெரியவில்லை. ஆனால் இன்று ஒரு பிள்ளைமார் பெண் வாழ்க்கையைச் சீரழிக்கும்போது, சமூக வலைத்தளத்தில் என்னை அவமானப்படுத்துவதில் ரொம்ப பெருமைப்படுகிறார்.

இதுக்குமேல் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. எனது குடும்பத்தை விட்டுச் செல்கிறேன். சீமானை விடாதீர்கள். அவர், முன்ஜாமீன் எடுக்கவோ, தப்பிக்கவோ விடக்கூடாது. நான் அதிக நாள் வாழ நினைத்தேன். ஆனால், வாழ விடவில்லை. சீமான், ஹரி நாடார் ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும்' எனக் கண்ணீர் வடித்தபடி அதில் கூறி வீடியோவை வெளியிட்டார். 

அடையாறில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில் விஜயலட்சுமிக்கு நியாயம் கேட்டு ரசிகர்கள் ட்வீட் செய்து வருகிறார்கள். தற்போது #vijayalakshmi என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. 

அவரின் தற்கொலை முயற்சி தொடர்பாகக் கேள்விப்பட்டு, அதிர்ச்சி அடைந்ததாகவும், தற்கொலை மட்டுமே எதற்கும் தீர்வு இல்லை என்றும் கஸ்தூரி தெரிவித்துள்ளார். மேலும்,  நேற்று இரவே நடிகை விஜயலட்சுமியைச் சந்திக்க நடிகை கஸ்தூரி முயன்றுள்ளார். ஆனால் முடியவில்லை என்றதால், இன்று காலை விஜயலட்சுமியின் தாயார் மற்றும் சகோதரி உஷா ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார்.  இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், விஜயலட்சுமியின் சகோதரி உஷாவை தனக்கு நன்றாகத் தெரியும், அவருடன் பணிபுரிந்திருக்கிறேன். தற்போது மூவரும் மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அவர்களுக்கு உடனடியாக தேவை மன நிம்மதி என்றும் கஸ்தூரி குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த விஜயலட்சுமியின் சகோதரி உஷா, தங்களுக்குப் பணமோ, பொருளோ தேவையில்லை என்றும் நிம்மதியாக வாழவிட்டால் போதும் என்று தெரிவித்துள்ளார். 

மேலும், இது தொடர்பாக நேற்று, விஜயலட்சுமியைச் சந்தித்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த காயத்ரி ரகுராமன் கூறுகையில், விஜயலட்சுமி எந்த சூழ்நிலையில் உள்ளனர் என்று தெரிவிக்கவில்லை. அவர்கள் இதுவரை எங்கு இருந்தனர் என்ற தகவலைக் கூட தெரிவிக்கவில்லை. தற்போது மிகவும் மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு யாருடைய உதவியும் இல்லை. அவர் ஒரு தனி பெண்ணாக குடும்பத்தை நிர்வகித்து வருகிறார். இதனால் பொருளாதார ரீதியாக மட்டுமின்றி மனதளவிலும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார். நடிகர் சங்க உறுப்பினராக இதற்கு முன் நான் உதவி செய்துள்ளேன். அவர்கள் மீண்டு வருவார்கள் என்று நம்பிக்கையுடன் இருப்போம் என்று தெரிவித்துள்ளார். 

நடிகை விஜயலட்சுமியிடம் நீதிபதி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விரைவு நீதிமன்ற நீதிபதி வெங்கடேசன், மருத்துவமனையில் விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளார். நீதிபதி அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

-பெ.மதலை ஆரோன்