நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் ஹரி நாடார் மீது பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தி வீடியோ வெளியிட்டு நடிகை விஜயலட்சுமி தற்கொலை 
முயற்சியில் ஈடுபட்டார்.

“பிரண்ட்ஸ்” திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கைச்சியாகவும், சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்துப் புகழ் பெற்றவர் நடிகை விஜயலட்சுமி. 

இதனிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, “சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்” என்று கூறி வீடியோ வெளியிட்டுத் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். 

மேலும், அவ்வப்போது, ஃபேஸ்புக் லைவ்வில் பேசும் நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வந்தார்.

குறிப்பாக, “என் கேள்விக்குப் பதில் சொல்வதைக் கூட, கேவலமாகக் கருதும் சீமான், எனக்குப் போதையில் தீராத தொல்லை கொடுத்திருக்கிறார்” என்று பகிரங்கமாகவே குற்றம்சாட்டியிருந்தார். 

மேலும், “சீமான் பார்ப்பதற்கு நல்லவராகத் தெரிந்தாலும், அவர் குடிப்பார் என்பது பலருக்கும் தெரியாது என்றும், அவர் குடித்துவிட்டு, என்னைப் பலமுறை டார்ச்சர் செய்திருக்கிறார்” என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டைச் சுமத்தினார்.

அத்துடன், “சீமான் குறித்து நான் பேசியது தொடர்பாகக் கனடாவிலிருந்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒருவர் என்னைத் தொடர்ந்து மிரட்டினார்” என்றும் விஜயலட்சுமி குற்றம்சாட்டினார்.

ஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத சீமான், ஒரு போதும் இது தொடர்பாகப் பதில் அளித்தது இல்லை. இதை ஒரு பொருட்டாகவும் அவர் கருதியதுமில்லை என்றும், கூறப்பட்டு வந்தது. 

அதே நேரத்தில், இது தொடர்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலெட்சுமியை நேரில் சந்தித்து, விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பான விசாரணையும் ஒரு புறம் நடைபெற்றுக்கொண்டு தான் இருந்தது.

இந்நிலையில், நேற்று அவர் தனது ஃபேஸ்புக்கில் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில், “நான், எனது அம்மாவுக்கும் அக்காவுக்காகவும் தான் உயிர் வாழ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், தற்போது எனக்கு அந்த எண்ணமே இல்லை. என்னை, ஹரி நாடார் நாக்கை அறுத்து விடுவேன் என்று என்னைப் பற்றி மிகவும் இழிவாகப் பேசி மிரட்டுகிறார். 

அத்துடன், என்னுடைய சாதி குறித்தும் அவர் இழிவாகப் பேசுகிறார். இதனால், சீமான் மீதும், ஹரி நாடார் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும், அந்த வீடியோவில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

இதனையடுத்து, கடும் மன அழுத்தத்திற்கு ஆளான நடிகை விஜயலட்சுமி, வீடியோ வெளியிட்ட பிறகு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்போது, நடிகை விஜயலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை விஜயலட்சுமியிடம், நீதிபதி வெங்கடேசன் நேரில் சென்று வாக்கு மூலம் பெற்றார். நீதிபதி அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் சீமான் மீது நடவடிக்கை பாயும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த சீனான் - விஜயலட்சுமி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.