“இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளதாக” நடிகர் விஜய் தரப்பில் தெரிக்கப்பட்டு உள்ளது. 

நடிகர் விஜய், தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு சுங்கவரி செலுத்திய நிலையில், நுழைவு வரி வசூலிக்கத் தடை கோரியிருந்த விஜய்யின் மனு மீதான விசாரணையின் போது, நீதிபதி எம்.எஸ் சுப்ரமணியம் கூறிய கருத்துகள் தான், கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் ஹாட் டாப்பிக்கா மாறியிருந்தது.

அதாவது, கடந்த 2012 ஆம் ஆண்டு, இங்கிலாந்திலிருந்து வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு இறக்குமதி வரியாக 1,88,11,045 ரூபாயை நடிகர் விஜய் செலுத்தியிருந்தார். ஆனால், சென்னை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்வதற்குச் சென்ற போது, நுழைவு வரியைத் தமிழ்நாடு வணிக வரித்துறையில் செலுத்தி ஆட்சேபனை இல்லா சான்று வாங்கி வர நடிகர் விஜய்க்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அதே நேரத்தில், கேரளா மற்றும் தமிழ்நாடு உயர் நீதிமன்றங்கள் நுழைவு வரி செலுத்த வேண்டியதில்லை என உத்தரவிட்டு உள்ளதாகக் கூறி நடிகர் விஜய் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

 “இந்த நுழைவு வரி செலுத்த வேண்டியதில்லை என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதால், வரியைச் செலுத்த வேண்டும்” என வணிகவரித்துறை உத்தரவிட்டது.

இதனையடுத்து, நடிகர் விஜய் வணிக வரித்துறையின் இந்த உத்தரவை எதிர்த்துக் கடந்த 2012 ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், “20 சதவீதம் நுழைவுவரி செலுத்திவிட்டு, வாகனத்தைப் பதிவுசெய்ய இடைக்கால உத்தரவு 2012 ஜூலை 17 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது என்றும், அதன் படி கடந்த 2012 ஜூலை 23 ஆம் தேதி 20 சதவீத வரியை செலுத்திய விஜய், வாகனத்தைப் பதிவு செய்து பயன்படுத்தி வருகிறார்” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், “சொகுசு காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கில் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார் நீதிபதி. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த நடிகர் விஜய், இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நிலவையில் இருந்து வந்தது.

மேலும், நடிகர் விஜய் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்குக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், பல்வேறு கருத்துகளை கூறியிருந்தார்.

குறிப்பாக, நடிகர்கள் ரீல் ஹீரோவாக இல்லாமல் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் என்றும் கூறிய நிலையில், தான் வரி செலுத்தவும், அபராதத்தை செலுத்தவும் தயாராக இருப்பதாகவும், தன்னை பற்றிய எதிர் மறை கருத்துகளை நீக்க வேண்டும்” என்றும் நடிகர் விஜய் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது நடிகர் விஜய் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு ஆவணங்களில் தொழிலை குறிப்பிடவில்லை என்று நீதிபதி கூறியிருந்தார். ஆனால், வழக்கு ஆவணங்களில் தொழிலை சொல்லவேண்டிய அவசியமில்லை. நுழைவு வரி செலுத்துவதில்லை என்றும், வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவதும் தேவையற்ற் கருத்துக்கள் என்றும், கஷ்டப்பட்ட உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்து இருப்பது தேவையற்றது என்றும் கூறப்பட்டது. 

அதே போல், “தன்னைப்போலவே நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் சூர்யா வழக்கிலும் இதுபோன்ற கருத்துகளை பதிவு செய்திருப்பதாகவும், சட்ட விரோதமாக இந்த வழக்கை தொடரவில்லை என்றும், வரிவிலக்கு கோருவது என்பது சட்டப்பூர்வமான நடவடிக்கை என்பதால் தான் வழக்கு தொடர்ந்ததாகவும்” தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக, “நிலுவை வரித்தொகையான ரூ. 32 லட்சத்து 30 ஆயிரத்தை  ஆகஸ்ட் 7ஆம் தேதி செலுத்திவிட்டோம் என்றும், நீதிபதி கூறிய கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளது என்றும், இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது” என்றும், நடிகர் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கை தள்ளி வைத்துள்ளனர். இதனால், நடிகர் வருத்தம் தெரிவித்த செய்திகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.