திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை, உணவகம் ஒன்றில் வெளியிட இருந்தநிலையில், போலீசார் அதிரடியாக தடுத்து நிறுத்தியுள்ளனர்.

நடிகர் சூர்யா, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி, நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவியும், முன்னணி நடிகையுமான ஜோதிகா ஆகிய இருவரும் சேர்ந்து, தங்களது ‘2டி’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழ் படங்களை தயாரித்து வருகின்றனர். கொரோனா காரணமாக திரையரங்கள் மூடப்பட்ட நிலையில், பிரபல அமேசான் ஓ.டி.டி. தளத்திற்கு தங்கள் தயாரிப்பு படங்களை வெளியிட்டு வருகின்றனர். 

அந்த வகையில், அமேசான் பிரைமில், தீபாவளியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடித்து, தயாரித்துள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம், கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி திங்கள்கிழமை அன்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை, தாபா உணவகம் ஒன்றில் அகன்ற திரையில் வெளியிட முயன்ற சம்பவம் திரையரங்க உரிமையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள தாபா உணவகம் ஒன்றில், ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளை திரையிட,  நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகின. நபர் ஒருவருக்கு , டிக்கெட் கட்டணமாக 200 ரூபாய் என்றும் இந்த திரைப்பட வெளியிட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ரசிகர்கள் விலை நிர்ணயம் செய்துள்ளனர். 

திரைப்படத்தின் இடைவேளையில், பார்வையாளர்களுக்கு அசைவ சிற்றுண்டி வழங்கவும், நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்ததாக கூறப்படுகிறது. ரசிகர்களின் இந்த செயலுக்கு, திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

S1

மேலும் நீட், வேளாண் சட்டங்கள் குறித்து குரல் கொடுக்கும் நடிகர் சூர்யா, தனது ரசிகர்கள் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்காமல் இருப்பதாகவும், ஓ.டி.டி படங்களை பொது வெளியில் திரையிட அனுமதி இல்லாத நிலையில், இது போன்ற செயல்கள், திரையரங்குகளை கடுமையாக பாதிக்கும் என தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறியிருந்தனர்.

இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ‘தமிழக அரசின் திரைப்பட ஒளிப்பதிவு சட்டப்படி, உரிமம் பெற்ற மற்றும் சென்சார் செய்யப்பட்ட திரைப்படங்களை மட்டுமே, பொது வெளியில் திரையிட வேண்டும். ஆனால் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள், உரிமம் இல்லாத ஓட்டலில் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை சட்ட விரோதமாக வெளியிடுவதை தடுத்து நிறுத்தக்கோரி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்திருந்தார். 

நடிகர் சூர்யாவின் திருப்பூர் மாவட்ட ரசிகர்கள், பொது வெளியில் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை வெளியிட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், போலீசார், தாபா உணவகத்தில் திரைப்படத்தை வெளியிடுவதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

ஏற்கனவே கொரோனா காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருப்பதாலும், உணவகங்களில் ஒரே இடத்தில் அதிகம் பேர் கூடுவதை தவிர்க்கும் பொருட்டும், ‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளை வெளியிட அனுமதி இல்லாததையும் போலீசார் காரணமாக கூறியுள்ளனர். 

S2

இதையடுத்து தாபா உணவகத்தில் பொது வெளியில் ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை திரையிடலாம் என்றிருந்த ரசிகர்களின் விருப்பத்துக்கு போலீசார் தடை விதித்தனர். மேலும் இரவு 11 மணிக்கு மேல் உணவகம் செயல்பட எங்கும் அனுமதியில்லை என்று, தமிழக அரசின் வழிகாட்டுதல்களை சுட்டிக்காட்டி தாபா உணவகத்தை மூடவும் போலீசார் அறிவுறுத்தினர். 

இரண்டு சிறப்பு காட்சிகள் வெளியிட நினைத்திருந்த நிலையில், ‘ஜெய் பீம்’ திரைப்படம் திரையிடப்படாததால், ரசிகர்கள் பிரச்சனை செய்யாமல் இருப்பதற்காக, அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.