2021 ஆம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய திரைப்படங்களின் பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அமேசான் ஓ.டி.டி. தளத்தில் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. இந்த திரைப்படம் அனைத்து தரப்பினர் மத்தியில் பெரும் வரவேற்பையும், அதே நேரத்தில் வன்னியர்கள் மற்றும் பா.ம.க. தரப்பில் எதிர்ப்பையும் பெற்றது. 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஜெய்பீம் திரைப்படத்தை பாராட்டியிருந்தார். 1990-களில் விருத்தாச்சலம் பகுதியில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த ராசாக்கண்ணு என்பவர் காவல் நிலையத்தில் போலீஸ் சித்திரவதையில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது 13 வருடங்கள் போராடி நீதியைப் பெற்றுக்கொடுத்தார்.

இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட ஜெய்பீம் திரைப்படத்தில் இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ராசாக்கண்ணு என்பவர் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்படுகிறார். இந்த வழக்கில் வழக்கறிஞர் கே.சந்துருவாக நடித்துள்ள சூர்யா நீதி பெற்று தருகிறார்.

இந்த திரைப்படத்தில் ராசாக்கண்ணுவை காவல் நிலையத்தில் அடித்து சித்திரவதை செய்யும் எஸ்.ஐ குருமூர்த்தி கதாபாத்திரத்தின் வீட்டில் வன்னியர்களின் அக்னி கலசம் படம் போட்ட காலண்டர் இடம்பெற்றதால், ஒரு வன்முறை போலீஸை வன்னியராக சித்தரிக்கப்பட்டிருக்கிறார் என்று கூறி பா.ம.க.வினரும், வன்னியர்களும் ஜெய்பீம் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஜெய்பீம் திரைப்படத்தில் அக்னி கலசம் நீக்கப்பட்டது.

JAIBHIM AND MASTER GOOGLE SEARCH 2021 INDIAN TAMIL CINEMA

எனினும் பா.ம.க. இளைஞரணி செயலாளர் அன்புமணி, நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகள் கேட்டு கடிதம் எழுதினார். அதற்கு சூர்யாவும் வன்னியர்களை இழிவுப்படுத்தும் நோக்கம் எனக்கோ, படக் குழுவினருக்கோ இல்லை எந்த நோக்கமும் இல்லை என்று ட்விட்டர் வாயிலாக அறிக்கை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து, பா.ம.க.வினர் நடிகர் சூர்யாவை மிரட்டும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். பா.ம.க.வின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர், நடிகர் சூர்யாவை உதைத்தால் அவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு தரப்படும் என்று கூறியதை அடுத்து, அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் குறித்து தவறாக சித்தரித்தற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கோரி நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, அமேசான் நிறுவனத்திற்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது.

எனினும் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், நடிகர்கள் சத்யராஜ், நாசர், நடிகைகள் ரோகிணி, ஷர்மிளா உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். 

JAIBHIM AND MASTER GOOGLE SEARCH 2021

தொல் திருமாவளவன், பாலகிருஷ்ணன், சரத்குமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். கடைசியாக இயக்குநர் த.செ.ஞானவேல் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டதை அடுத்து, இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.  

இந்நிலையில் பிரபல தேடு பொறியான கூகுளில் இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் ஜெய்பீம் முதலிடம் பிடித்துள்ளது. 2 ஆம் இடத்தை இயக்குநர் விஷ்ணுவர்த்தன் இயக்கிய ஷெர்ஷா திரைப்படமும், பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே திரைப்படம் 3 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. அந்த பட்டியலில் 6-வது இடத்தில் இருக்கிறது மாஸ்டர்.

டாப் 10 பட்டியலில் இரண்டு தமிழ் படங்கள் தான் இருக்கிறது. ஒன்று ஜெய்பீம், மற்றொன்று மாஸ்டர். மேலும் ஐ.எம்.டி.பி. இணையதளத்தின் மிகவும் பிரபலமான இந்திய படமாக ஜெய்பீம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக ஜெய்பீம் திரைப்படத்துக்கு 10-க்கு 9.6 ரேட்டிங் கொடுத்தது ஐ.எம்.டி.பி.  

இதன் மூலம் ஐ.எம்.டி.பி. இணையதளத்திடம் அதிக ரேட்டிங் வாங்கிய படமாக ஜெய்பீம் புது சாதனை படைத்தது. 9.3 ரேட்டிங்குடன் முதல் இடத்தில் இருந்த The Shawshank Redemption ஹாலிவுட் படத்தை இரண்டாவது இடத்திற்கு தள்ளியுள்ளது ஜெய்பீம். மேலும் கோல்டன் குளோப் விருதுக்கும் ஜெய்பீம் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.