அண்மையில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்துக்கு அரசியல் ரீதியான எதிர்ப்புகள் கிளம்பி உள்ள நிலையில், #WeStandWithSuriya என்ற ஹாஷ்டேக்கை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, அவரின் சொந்த நிறுவனமான 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவான, 'ஜெய்பீம்' திரைப்படம் அமேசான் ஓ.டி.டி. தளத்தில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகியது.

ஜெய்பீம் திரைப்படம் தியேட்டரில் வெளியிடப்படாமல், ஓ.டி.டி. தளத்தில் வெளியானாலும், அரசியல் தலைவர்கள் உள்பட பொதுமக்கள் பலரும் ஜெய்பீம் திரைப்படத்திற்கு வரவேற்பு தெரிவித்தனர். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு புனையப்பட்ட இந்த படம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். 

p1

இது ஒருபுறமிருக்க, படத்தில் வரும் காட்சி ஒன்றில் காலண்டரில் உள்ள புகைப்படம் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அந்த புகைப்படம் நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜெய்பீம் திரைப்படத்தால், குறிப்பிட்ட சமுதாயம் வேதனையும், கொந்தளிப்பும் அடைந்துள்ளதாக கூறி, நடிகர் சூர்யாவுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். 

இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அண்புமணி ராமதாஸுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டு பதிலும் அளித்திருந்தார்.

மேலும், நிஜ செங்கேணியான, ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் பெயரில் 10 லட்ச ரூபாய் டெபாசிட் செய்து, அதிலிருந்து மாதந்தோறும் அவருக்கு வட்டி கிடைக்க வழி செய்ய முடிவு செய்திருப்பதாக நடிகர் சூர்யா நேற்று தெரிவித்திருந்தார். 

p2

இதனிடையே மயிலாடுதுறையில் நடிகர் சூர்யா நடித்த வேல் திரைப்படம் திரையிடப்பட்டது. பா.ம.க.வினர் வருவதை அறிந்த திரையரங்க நிர்வாகம் சுவரொட்டியை மாற்றி ஒட்டியது.

திரையரங்கிற்கு வந்த பா.ம.க.வினர் திரைப்பட காட்சியை நிறுத்த சொன்னதால் ஒடிக்கொண்டிருந்த வேல் திரைப்படம் காட்சி நிறுத்தப்பட்டது. நடிகர் சூர்யாவிற்கு எதிராக பா.ம.க.வினர் முழக்கமிட்டனர். 

மேலும் நடிகர் சூர்யாவின் சுவரொட்டி படத்தை கிழித்தனர். நடிகர் சூர்யா, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் அவரை தாக்கும் இளைஞர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட பா.ம.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

p3

இதனை கண்டிக்கும் விதமாக ட்விட்டரில், எங்களை தாண்டி தான் சூர்யா அண்ணனை தொடணும் என நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் எதிர்ப்புகளை தெரிவித்து வருபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் #WeStandWithSuriya ஹாஷ்டேக்கை சூர்யா ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

நடிகர் சூர்யாவுக்கு எந்தவொரு மிரட்டலையும் அரசியல் ரீதியாக வைக்கக் கூடாது என்றும், சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் சூர்யா ரசிகர்கள் ட்வீட்களை பதிவிட்டு வருகின்றனர். 

அன்புமணி ராமதாஸ் ஜெய்பீம் படத்தை எதிர்த்த நிலையில், திருமாவளவன், சரத்குமார் உள்ளிட்ட பலர் ஜெய்பீம் திரைப்படம் மற்றும் நடிகர் சூர்யாவை பாராட்டி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சூர்யாவை எட்டி உதைக்கிற முதல் இளைஞனுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்று, வன்முறையைத் தூண்டும் விதத்தில் பா.ம.க.வினர் பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.