நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தின் நிஜ நாயகரான ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு, தனது சொந்த செலவில் வீடு கட்டிக்கொடுப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்குநர் தா.செ.ஞானவேல் ’ஜெய் பீம்’ என்ற திரைப்படத்தை, எழுதி இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘2டி’ எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து, முக்கிய கதாபாத்திரத்திலும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் சூர்யா நடித்திருந்தார். 

‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், மணிகண்டன், லிஜோமோல் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது, இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டே  ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை, படமாக எடுத்திருந்தனர். இந்த திரைப்படம் பிரபல அமேசான் ஓ.டி.டி. தளத்தில், வெளியாகி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

r1

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை அடுத்த கம்மாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்தது முதனை என்ற கிராமம். அப்பகுதியைச் சேர்ந்தவர் ராசாக்கண்ணு. 1993-ஆம் ஆண்டு ஒரு பொய்யான திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜாக்கண்ணு, காவல்துறையால் லாக்அப்பில் அடித்து கொலை செய்யப்பட்டார். பழங்குடி வேட்டை சமூகத்தைச் சேர்ந்த அவரது கொலை வழக்கில் தொடர்புடைய காவல்துறையினர் உள்ளிட்டவர்களுக்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. 

கொலை செய்யப்பட்ட ராசாக்கண்ணு குறிப்பிட்ட அந்த திருட்டு நிகழ்வில் தொடர்பில்லாதவர் என்பதும் பிறகு விசாரணையில் தெரியவந்தது. இருளர் - பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ராசாக்கண்ணு கொலை வழக்கில் ஆஜராகி, நீதி பெற்றுத் தந்தவர் வழக்கறிஞர் கே.சந்துரு. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கம்மாபுரம் முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜா மோகன் மூலமாக, வழக்கறிஞர் சந்துருவை பார்வதி அணுகவே வழக்கு உயர்நீதிமன்றத்தை அடைந்தது. 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கே.சந்துரு, வழக்கறிஞராக பணியாற்றிய காலகட்டத்தில் அவர் எடுத்து நடத்திய இந்த வழக்குதான் 'ஜெய் பீம்' படமாக உருவாகி பாராட்டுக்களை  குவித்துக்கொண்டிருக்கிறது. கணவரின் நீதிக்காக கடைசிவரை போராடிய ராசாக்கண்ணுவின் 75 வயதான மனைவி பார்வதி தற்போது முதனை கிராமத்தில் வசித்து வருகிறார். 

r2

சமீபத்தில் நிஜ செங்கேணியான பார்வதி அம்மாள் திருட்டு பழி தங்கள் மீது போடப்பட்டு, எப்படியெல்லாம் கொடுமை படுத்தப்பட்டோம் என கூறியது, கேட்பவர்கள் கண்களையே கலங்க வைக்கும் விதமாக இருந்தது. தன்னுடைய கணவரை போலீசார் சாகடித்தது மட்டும் இன்றி, அவர் தப்பி ஓடி விட்டதாக நாடக மாடியது என வாழ்க்கையில் நடந்த துயரங்களை கூறி இருந்தார். கடைசியாக  தன் கணவருடைய வாயில்நான் நான் சோறு ஊட்டும் போது ஒட்டியிருந்த ஒரு பருக்கை சோற்றை வைத்துதான், அந்த ஃபோட்டோவை பார்த்து அது அவர்தான் என்பதை 1 வருடம் கழித்து கண்டுபிடித்தோம் என்று அவர் கூறியது கொடுமையின் உச்சமாக தெரிந்தது.

இப்படி பல துன்பங்களுக்கு ஆளாகி, தன்னுடைய கணவரின் மரணத்திற்கு சட்ட பூர்வமாக நீதி கண்ட நிஜ செங்கேணியான பார்வதி அம்மாள், தற்போது வரை ஒரு ஓலை குடிசையில் தான் வாழ்ந்து வருகிறார். தட்டுக்கூடை பின்னி தன்னுடைய பிழைப்பை ஓட்டி வரும் இவருக்கு தன்னுடைய சொந்த செலவில், வீடு கட்டி தர உள்ளதாக அறிவித்து மாஸாக அறிவித்துள்ளார் பிரபல நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, ‘செய்யாத குற்றத்துக்காக சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு ராஜாக்கண்ணு கொல்லப்பட்டார். அவரது மனைவி பார்வதி அம்மாவின் இன்றைய வாழ்க்கை நிலையை தனியார் யூடியூப் சேனலில் பார்த்தபோது என்னை பெரிதும் பாதித்தது. 

அவர்களின் மூலம் மேலும் விவரங்களைக் கேட்டறிந்ததும் கூடுதலாகத் துயருற்றேன். பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறேன். ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவின் வறுமை நிலையினை என் கவனத்துக்குக் கொண்டுவந்த யூடியூப் குழுவினருக்கு என் நன்றிகள்.

28 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான துயர நிகழ்வை, இன்றைக்குத் தமிழகம் முழுக்க பேசுபொருளாக்கிய ‘ஜெய் பீம்’ படக்குழுவினருக்கும், ‘ஜெய்பீம்’ படத்தை உயரிய கலைப்படைப்பாக மாற்றிய சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும், இயக்குநர் த.செ.ஞானவேலுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும் நன்றியும்’ இவ்வாறு நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

A house for Rajakannu’s family 🙏🏼 #JaiBhim #Suriya @Suriya_offl @2D_ENTPVTLTD @rajsekarpandian @tjgnan @jbismi14 @valaipechu pic.twitter.com/nJRWHMPeJo

— Raghava Lawrence (@offl_Lawrence) November 8, 2021