“எதிர்காலத்தில் நிச்சயமாக நானும் அரசியலுக்கு வருவேன்” என்று இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தெரிவித்து உள்ளார்.

புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் ஆண்டு தோறும், திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி, இந்தியத் திரைப்பட விழா, அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் நேற்றைய தினம் நடைபெற்றது. 

இந்த விழாவில், கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த படமாக “ஒத்த செருப்பு அளவு 7” என்ற தமிழ் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான புதுவை அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருதினை இயக்குனர் பார்த்திபனுக்கு முதலமைச்சர் நாராயணசாமி வழங்கினார். விருதுக்கான பாராட்டு பத்திரத்துடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசுக்கான காசோலையையும் வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் வழங்கினார்.

இதனையடுத்து, அந்த விழாவில் பேசிய நடிகர் பார்த்திபன், “பல திரைப்படங்கள் தோல்விகள் அடைந்தாலும், ரசிகர்களின் ரசனை காரணமாக ஒத்த செருப்பு போன்ற படத்தை எடுக்க முடிந்ததாக” குறிப்பிட்டார். 

“ஒரு குத்து விளக்கு ஏற்ற பல குச்சிகள் தேவைப்படுகின்றன. அஜித், விஜய் படங்கள் பரபரப்பாக ஓடும் காலத்தில் ஒத்த செருப்பு போன்ற படங்கள் தோல்வி அடைந்ததை கண்டு நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். தோல்விகளால் துவண்டு போக வேண்டாம். தோல்வியால் ஏற்படும் மன உளைச்சலால் தற்கொலை போன்ற முடிவுகளுக்கு செல்ல கூடாது” என்றும் கூறினார்.

அத்துடன், “புதுச்சேரியில் ஷூட்டிங் கட்டணம் தற்போது அதிகமாகி விட்டதாகவும், அதனைக் குறைக்க வேண்டும்” என்றும், அவர் கோரிக்கை விடுத்தார். இந்த விழாவிற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பார்த்திபன், “தற்போது அரசியலுக்கு வரும் நடிகர்களும் சிறப்பான ஆட்சி தருவார்கள்” என்ற நம்பிக்கையுள்ளது என்று குறிப்பிட்டார்.

மேலும், “நானும், எதிர்காலத்தில் நிச்சயமாக அரசியலுக்கு வருவேன்” என்றும், நடிகர் பார்த்திபன் தெரிவித்தார்.

“யாருக்கு வாக்களிப்பது என்று மக்கள் குழப்பமாக இருக்கிறார்கள் என்றும், திரைத்துறையினர் அரசியலுக்கு வந்து சிறப்பான ஆட்சி தந்துள்ளனர்” என்பதையும் 
அவர் சுட்டிக்காட்டினார்.

“அதனால், நடிகர்கள் என்பதால் யாரையும் ஒதுக்க வேண்டியதில்லை என்றும், தனக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது. நிச்சயமாக எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன்” என்றும், அவர் கூறினார். 

“நான் மட்டுமல்ல நிறைய இளைஞர்களுக்கும் அரசியலுக்கு வரவேண்டும்” என்றும், அவர் கேட்டுக்கொண்டார்.  

“சினிமாவை விட்டு அரசியலுக்குச் சென்றாலும், கலையின் மேல் எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோருக்கு ஈடுபாடு உண்டு” என்றும், பார்த்திபன் குறிப்பிட்டார். 

“சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து நல்லது செய்தோர் நிறையப் பேர் உண்டு. இவர்கள் அரசியலுக்கு வந்து விடுவார்களோ? எனச் சிலர் பயப்படவும் வைக்கிறார்கள். ரஜினிகாந்த் கட்சி அறிவிப்பதற்கு முன்பே புதிய காட்சிகளைத் தொடங்கும் நேரம் என டுவீட் செய்திருந்தேன். நடிகர் விஜயும் அரசியலுக்கு வருவார் எனக் கூறினார்கள். புதிய கட்சியை நான் கூடத் தொடங்கலாமா? என்று யோசிக்கிறேன். எனது கட்சிக்குப் பெயர் புதிய பாதை” என்றும், அவர் தெரிவித்தார்.