9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பல்வேறு கலாட்டாவுக்கு மத்தியில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பல்வேறு இடங்களில் சிரிப்பை ஏற்படுத்தக்கூடிய நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.

நெல்லை மாவட்டம்  பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவந்திப்பட்டியை சேர்ந்த பெருமாத்தாள் என்ற 90 வயது மூதாட்டி ஒருவர், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டி போட்டார். இதில், அந்த மூதாட்டி தன்னை எதிர்த்து போட்டியிட்ட 2 பேரை டெபாசிட் இழக்க செய்ததோடு, 2 ஆம் இடம் பிடித்த வேட்பாளரை விட கிட்டதட்ட ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று அபார வெற்றி பெற்று உள்ளார்.

அதே போல், தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட  வெங்கடாம்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட 21 வயதான சாருகலா இன்ற இளம் பெண், ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்து உள்ளார்.

முக்கியமாக, வெற்றிப் பெற்ற பொறியியல் பட்டதாரியான 21 வயதான சாருகலா, கிட்டதட்ட 3336 வாக்குகள் பெற்றதுடன், வாக்கு எண்ணிக்கையில் தன்னை எதிரத்து போட்டியிட்ட 3 முக்கிய வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்துள்ளார்.

அதேபோல், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் நடுஹட்டி ஊராட்சி 6 வது வார்டு தேர்தலில் 2 ஓட்டு வித்தியாசத்தில் பட்டதாரி இளம் பெண் நதியா வெற்றி பெற்று உள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்து உள்ள காவேரிப்பட்டு பகுதியை சேர்ந்த கண்ணுரங்கம் என்பவரின் மகள்கள் அக்காள் - தங்கையான 50 வயதான மாலா சேகர், 48 வயதான உமா கண்ணுரங்கம் ஆகிய இருவரும் வெற்றி பெற்று உள்ளனர். 

அதாவது, ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மாலா சேகர் வெற்றிப் பெற்ற நிலையில், இவரது தங்கை உமாகண்ணுரங்கம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஒன்றியம் தில்லைநாயகபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் 2 வாக்குகள் வித்தியாசத்தில் மகாவதி என்ற பெண் வெற்றி பெற்றார். பெற்றிப் பெற்ற மகாவதி, மறைந்த தனது கணவனின் இடத்துக்கு வந்த மரியாதை செலுத்தினார்.

முக்கியமாக, பெருந்துறை ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர், ஒரு வாக்கு கூட பெறாத சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. அமமுக ஒன்றிய செயலாளர், கிளை செயலாளர், மாவட்ட செயலாளர் ஆகியோர் பல நாட்கள் பிரச்சாரம் செய்தும் ஒரு வாக்கு கூட பெற முடியாமல் போனது அக்கட்சியினரை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வடிவேலு பட பாணியில் வாக்குச்சீட்டில் உள்ள அனைத்து சின்னத்திலும் ஒருவர், தலா ஒரு ஓட்டு போட்டு, எல்லோருக்கும் வேட்டு வைத்து உள்ளார். அதுவும், விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 16 வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்குச்சீட்டில் தான் காமெடி காட்சிகள் அரங்கேறி இருக்கின்றன.

திருக்கழுகுன்றம் ஒன்றியத்தில் பதிவான வாக்குச்சீட்டு ஒன்றில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் ஒரு குத்து,  பாமகவின் மாம்பழம் சின்னத்தில் ஒரு குத்து என்று இரண்டு சின்னங்களிலும் குத்தியிருக்கிறார்.  ஒரே சீட்டில் இரு ஓட்டுகளை போட்டுள்ளதால் அந்த ஓட்டு செல்லாத  ஓட்டு என்று அதன் பிறகு அறிவிக்கப்பட்டது.

நெல்லை பாளையங்கோட்டை ஒன்றிய தேர்தலில் வாக்குச்சீட்டில் வாக்காளர் எழுதிய வாசகத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வாக்களார் எழுதி உள்ள பதிவில், “எந்த வேட்பாளரும் 500 ரூபாய் பணம் தராததால் நான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை” என்று எழுதியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் கோவையில் நடைபெற்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக நிர்வாகி ஒருவர், தனது குடும்பத்தில் தன்னையும் சேர்த்து மொத்தம் 6 பேர் இருந்தும், அவர் ஒரேயொரு ஓட்டு பெற்றுள்ளது இணையத்தில் பெரும் வைரலாகி இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.

குறிப்பாக, “169 இடங்களில் விஜய் ரசிகர்கள் போட்டியிட்ட நிலையில், இவர்களில் 77 பேர் வெற்றி பெற்றுள்ளதாக” தளபதி விஜய் மக்கள் இயக்க அகில இந்தியத் தலைவர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்து உள்ளார்.

மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தல் ஒன்றிய கவுன்சிலர் பதிவியில் திமுக 991 இடங்களிலும், அதிமுக 200 இடங்களிலும், மற்றவை 139 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 

அதே போல், ஊரக உள்ளாட்சி தேர்தல் மாவட்ட கவுன்சிலருக்கான பதவியில் திமுக 132 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும், முன்னிலை வகிக்கிறது. தற்போது வரை 98 சதவீத வாக்கு எண்ணும் பணிகள் முடிடைந்து உள்ளதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதனிடையே, “ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அரசின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்” என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.