ஆந்திர மாநிலத்தில் அரசுப் பேருந்து ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்ததில் இதுவரை 9 பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அஸ்வராப்பேட்டையில் இருந்து ஜங்காரெட்டிகுடம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

பேருந்து நடத்துநர், ஓட்டுநர் மற்றும் 45 பயணிகள் என மொத்தம் 47 பேர் அந்த அரசுப் பேருந்தில் பயணித்தனர். ஆந்திர மாநில அரசுப் பேருந்து ஜங்காரெட்டிகுடம் மண்டலத்தில் ஏலூர் அருகே உள்ள ஜில்லருவாகு என்ற இடத்தில் ஆற்றைக் கடப்பதற்காக பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே வந்த லாரி மீது மோதுவதை தவிர்க்க அரசுப் பேருந்தை ஓட்டுநர் திருப்பியதாகக் கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து விலகி ஆற்றிற்குள் தலைகுப்புற அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதனால் அரசுப் பேருந்து ஆற்று நீரில் மூழ்கியது. அரசுப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறித்து தகவல் வந்ததையடுத்து மீட்பு குழுவினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

andhra pradesh accident

இந்த கோர விபத்தில் அரசுப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் 5 பெண்கள் உள்பட 9 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பேருந்தில் பயணித்த எஞ்சியவர்களை, தீயணைப்புத்துறையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் தேடி வந்தனர்.
 
ஆந்திர மாநில அரசுப் பேருந்து நீருக்குள் மூழ்கி உள்ளதால் அனைவரும் இறந்திருக்கலாம் என அச்சம் ஏற்பட்ட நிலையில்,  போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் படகுகள் மூலம் பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் மீதமுள்ள 38 பேர் மீட்புக் குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனிடையே  அரசுப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். 

ஆற்றில் கவிழ்ந்து அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திர மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் வெங்கட்ராமையா, அரசுப் பேருந்து விபத்து குறித்து உயர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அரசுப் பேருந்து விபத்தில் உயிரிழந்த குடும்பங்களின் உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அரசுப் பேருந்து விபத்து சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.