உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட 7 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டது பிரேதப் பரிசோதனையில் உறுதியாகி உள்ளது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த நாகூரான் என்பவரின் 7 வயது மகள் ஜெயபிரியா என்ற சிறுமி, நேற்று முன் தினம், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருக்கும் போது மாயமானார். 

வீட்டின் அருகே விளையாடிய சிறுமி காணாததால், அந்த பகுதியில் உள்ள தனது உறவினர்கள் வீட்டிற்கு அவர் சென்று இருப்பார் என்றும், மாலைக்குள் வீட்டிற்கு வந்து விடுவார் என்றும், அவரது பெற்றோர்கள் நினைத்திருந்தனர். ஆனால், இரவு நேரம் ஆகியும் சிறுமி வீட்டிற்கு வராததால், அந்த பகுதியில் உள்ள உறவினர்கள் வீடுகள், பொது இடங்கள் என அந்த பகுதி முழுவதும் தேடி இறுதியாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள கிளவிதாம் ஊரணி பகுதியில், ஆள் அரவமில்லாத கருவேல மரங்கள் அடர்ந்த கண்மாய் கரை உள்ள கொடிகள் அடர்ந்த இடத்தில் மாயமான சிறுமி ஜெயபிரியா, உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து விரைந்து வந்த போலீசார், சிறுமியை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, சிறுமி சடலமாக மீட்கப்பட்ட இடத்திற்கு, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார், நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், 7 வயது சிறுமி மண்டையில் அடிக்கப்பட்டு உள்ளதாகவும், உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டே சிறுமி கொலை செய்யப்பட்டதாகவும், அந்த பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று கோரி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, போலீசார் அவர்களைச் சமாதானப்படுத்தினர்.

இந்நிலையில், சிறுமியின் வீடு அமைந்துள்ள ஏம்பல் பகுதியைச் சேர்ந்த 27 வயதான ராஜேஷ் என்பவரைச் சந்தேகத்தின் பேரில், போலீசார் அவரிடம் முதலில் லேசாக விசாரித்துள்ளனர். அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் சொல்லி உள்ளார். 

இதனையடுத்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று, போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், “சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தபோது, சிறுமி கத்தி கூச்சலிட்டதாகவும், அவரை வெளியே விட்டால் என்னைப் பற்றி புகார் கூறி, என்னை மாட்டி விட்டுவிடுவார் என்ற பயத்தில், அவரை அடித்துக் கொன்றதாகவும்” அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், ராஜேஷை கைது செய்து, சிறையில் அடைத்தனர். 

மேலும், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இந்த வழக்கில், அந்த பகுதியைச் சேர்ந்த வேறு யாருக்கேனும் இதில் தொடர்பு 
இருக்கிறதாக என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, ஈவு இறக்கம் இன்றி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 7 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை 
செய்யப்பட்டுள்ளது சம்பவம், தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், “7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது மனதை உலுக்குகிறது என்றும், குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார். 

கொரோனாவுக்கு உலகமே வீடுகளில் முடங்கி உள்ளது. இது போதாது என்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில், செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் இவரது மகன் பென்னிக்ஸ் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த விவகாரம், இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், சர்சைகளையம் ஏற்படுத்தி உள்ளது. இப்படிப்பட்ட அவதாரமான இந்த சூழ்நியலைீல், அறந்தாங்கியில் 7 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.