“தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக” மத்திய சுகாதாரத்துறை எச்சரித்து உள்ளது.

இந்தியாவையே உலுக்கி எடுத்த கொரோனா 2 வது அலையானது, ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து படிப்படியாகக் குறையத் தொடங்கியது. 

இதனால், தினசரி கொரோனா பாதிப்பானது 40 ஆயிரத்திற்கும் கீழ் வந்தது. ஆனால், சில நாட்களில் மீண்டும் 40 ஆயிரத்திற்கு மேல் சென்று, ஏற்றம் இறக்கமாகவும் காணப்பட்டன. 

வட கிழக்கு மாநிலங்களிலும், கேரளாவிலும் கொரோனா தொற்று உச்சத்திலேயே இருந்ததே அதற்குக் காரணம். அதே போல, தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை குறையாமலேயே இருந்து வந்தது. 

முக்கியமாக, சென்னையில் பெரிய அளவில் குறைந்திருந்த கொருானா பாதிப்பு, மீண்டும் படிப்படியாக உயர்ந்தது.

இந்த தொற்று பரவலானது, 3 ஆம் அலைக்கான அறிகுறி என்றும், பேசப்பட்டு வந்தன. அத்துடன், தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில மாவட்டங்கள் கொரோனா தொற்று குறையாமல் சற்று அதிகரித்த வண்ணம் இருந்த காரணத்தால், அந்த மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று, மத்திய அரசு அறிவுறுத்தி வந்தது. 

மேலும், கொரோனா தொற்று அதிகரிப்பதுபோல் தெரிந்தால், உடனடியாக கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு வலியுறுத்தி வந்தது. 

இதன் காரணமாகவே சென்னை, கோவையில் கட்டுப்பாடுகளை அதிகரித்து, மீண்டும் தளர்வுகளைக் குறைத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.

இந்த நிலையில் தான், “தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது” என்று, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.

அதன் படி, “சென்னை, கோவை, ஈரோடு, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது” என்றும், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். 

மேலும், “இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 97.4 சதவீதமாக அதிகரித்து உள்ளது” என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக சற்று முன்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மத்திய சுகாதாரத் துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால், “இந்தியா முழுவதும் மொத்தம் 37 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்த வண்ணம் இருப்பதாக” கவலைத் தெரிவித்தார். 

“நாடு முழுவதும் கொரோனா குறைந்து வரும் போது, இந்த மாவட்டங்களில் மட்டும் உயர்வது மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது என்றும், அதிலும் கேரளா மாநிலத்தில் தான், மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது” என்றும், அவர் வேதனை தெரிவித்தார்.

“கேரளாவில் மட்டும் 11 மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும்” அவர் கவலை தெரிவித்தார்.

“கடந்த வாரம் இந்தியாவில் பதிவான மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் கேரளாவில் மட்டுமே 51.51 சதவீதம் அளவுக்கு பதிவாகின என்றும் குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டில் 7 மாவட்டங்கள் அதிக அளவில் மீண்டும் கொரோனா பரவி வருவதாகக் கூறியுள்ளார். 

“இமாச்சலப் பிரதேசத்தில் 6 மாவட்டங்கள், கர்நாடகாவில் 5 மாவட்டங்கள், ஆந்திரா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் இருந்து தலா 2 மாவட்டங்கள், மேகலயா, 

மிசோரத்தில் தலா 1 மாவட்டங்கள் என்ற அளவில் கொரோனா மீண்டும் அதிகரித்திருப்பது கவலை அளிக்கும் வகையில் உள்ளதாகவும்” அவர் வேதனை தெரிவித்தார்.

குறிப்பாக, “இந்த மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை மீண்டும் அதிகரித்து கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசுகளிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளதாகவும்” அவர் கூறினார். 

முக்கியமாக, “தமிழ்நாட்டில் கோவை, சென்னை, ஈரோடு, செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து உள்ளது என்றும், அங்கும் பல கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்” என்றும், மத்திய சுகாதாரத் துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.