தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சீனிமுருகன் ஜோதிமணி தம்பதியருக்கு மதன், பாலகுரு என்று இரண்டு மகன்கள் உள்ளனர். 


அவர்களுக்கு அனைவரது வீட்டிலும் நடப்பது போல்,  தங்களது பெற்றோர்களின் செல்போன்களை எடுத்து விளையாடுவது வழக்கம். மதன் மற்றும் பாலகுரு இருவருக்கு இடையிலும் செல்போனுக்கு சண்டை வருவதும் வழக்கம். 


இந்நிலையில் 9ஆம் வகுப்பு படிக்கும் மதன் பள்ளிக்கு சென்று விட்டார். தந்தை சீனிமுருகனும் கூலி வேலைக்கு சென்று விட்டார், தாய் ஜோதிமணியும் உறவினர் வீடு திருமணத்திற்கு சென்றுள்ளார். கொரோனா தொற்று காரணமாக 6ஆம் வகுப்பு படிக்கும் பாலகுருவிற்கு பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். 


திருமண வீட்டிற்கு தானும் வருதாக தாய் ஜோதிமணியிடம் அழுது அடம்பிடித்துள்ளார். ஆனால் வீட்டில் இருக்கும்படி தாய் கூறியுள்ளார். அதற்கு பாலகுரு வீட்டில் இருக்க வேண்டும் என்றால் தனக்கு செல்போனை தந்துவிட்டு செல்ல வேண்டும் என்றுள்ளார். இதை மறுத்த தாய் ஜோதிமணி, சாப்பிட்டுவிட்டு வீட்டில் இருக்கும் படி அறிவுறுத்தி விட்டு கிளம்பியுள்ளார். 


திருமண நிகழ்ச்சி முடிந்துவிட்டு தாய் ஜோதிமணி வீட்டிற்கு வந்துப் பார்த்தபோது பாலகுரு தூக்கில் தொங்கிய படி இருந்துள்ளார். திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய தாய் ஜோதி வீட்டிற்கு திரும்பியவுடன் இளைய மகன் உயிரிழந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியில் அழுது அலறியுள்ளார். 


ஜோதிமணியின் அழுகுரலை கேட்ட அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், சிறுவன் பாலகுருவின் உடல் பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


மேலும் விசாரணையில், தாய் திருமண நிகழ்ச்சிக்கு அழைத்து போகவில்லை என்றும் செல்போன்  கொடுத்துவிட்டு செல்லவில்லை என்ற காரணத்துக்காகவும் பாலகுரு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.