கோவை அருகே சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த 66 வயது முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

“காதலுக்கு கண் இல்லை! காதல், எப்போது யாருக்கும் வரும் என்ற சொல்ல முடியாது” ஆகிய சினமா வசனங்கள் எல்லாம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதா? என்ற சந்தேகம், இந்த சம்பவத்தைப் பார்க்கும்போது கேட்கத் தோன்றுகிறது.

கோவை போத்தனூர் அடுத்த பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த 66 வயதான பீர் பாஷா, அதே பகுதியில் தனியார்ப் பள்ளியில் படித்து வரும் 16 வயது சிறுமியை தவறான கண்ணோட்டத்தில் நீண்ட நாட்களாகப் பார்த்து வந்துள்ளார்.

இந்த விசயம் சிறுமிக்கு தெரியவந்த நிலையில், அந்த பகுதியில் கடந்து செல்லும் போதெல்லாம் அந்த முதியவரை சிறுமி தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தன் ஆசைகளை அடக்கிக்கொள்ள முடியாமல், 66 வயதான பீர் பாஷா, அந்த 16 வயது சிறுமிக்கு காதல் கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், “என்னை எனக்குப் பிடித்திருக்கிறது. உனக்கு ஓகே வா?” என்று எழுதி, அந்த சிறுமியிடம் அவர் கொடுத்துவிட்டு, சினிமாவில் வரும் கதாநாயகன் போல வானத்தில் சிறகடித்து பறந்துள்ளார். 

கடிதத்தைப் படித்து பதறிப்போன சிறுமி, நேராக அந்த கடிதத்தை, தன் பெற்றோரிடம் காட்டி, இந்த முதியவர் பற்றிக் கூறியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சம்மந்தப்பட்டவரின் வீட்டில் வந்து புகார் கூறி, அந்த முதியவரிடம் சண்டை போட்டு விட்டு வந்துள்ளனர். ஆனால், அடுத்த சில நாட்களில் சிறுமி தனியாகக் கடைக்கு வரும்போது, வழிமறித்த அந்த முதியவர், அந்த சிறுமியை கடுமையாக மிரட்டி உள்ளார்.

இதனையடுத்து, அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியே வரவே பயந்துபோய் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளார். சிறுமியைக் கண்காணித்த அவரின் பெற்றோர்கள், சிறுமியிடம் நைசாக “என்ன நடந்தது?” என்று கேட்டுள்ளனர்.

அப்போது, அந்த முதியவர், சிறுமியை கடுமையாக மிரட்டியது தெரியவந்தது. இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பீர் பாஷாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, 16 வயது சிறுமிக்கு 66 வயது முதியவர் காதல் கடிதம் கொடுத்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.