உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வழிப்பறியில் ஈடுபட்ட டாட்டூ கலைஞர் உட்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் அடிக்கடி ஜெயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்ததால், இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், போலீசார் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, இந்த ஜெயின் வழிப்பறி குறித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் எண்களை வைத்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இப்படியாக காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டுவந்த திருவள்ளூரை சேர்ந்த 25 வயதான சங்கர் மற்றும் மனோஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

அது தொடர்பாக அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வழிப்பறிக்குத் தலைவனாக இருந்தவர் பிரபல டாட்டூ கலைஞர் வசந்த் ப்ரியன் என்பது தெரிய வந்தது. 

அந்த டாட்டூ கலைஞர் வசந்த் ப்ரியன் யார் என்றால், “35 வயதான டாட்டூ கலைஞர் வசந்த் ப்ரியன், சென்னை வடபழனியில் டாட்டூ குத்தும் கடை வைத்து நடத்தி வந்திருக்கிறார். தனது திறமையால், டாட்டூ குத்துவதை ஸ்பெசலாக வீடியோ எடுத்து, அதனை யூடிப் பக்கத்தில் பதிவேற்றம் செய்து, பலரது கவனத்தையும் பெற்றவர் ஆவர்.

இதன் மூலமாகவே டாட்டூ கலைஞர் வசந்த் ப்ரியன்,  டாட்டூ குத்தும் துறையில் இன்னும் பிரபலமானார். அவரை தேடி அவரது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அதிகம்.

அதே நேரத்தில், டாட்டூ கலைஞர் வசந்த் ப்ரியனுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், அவருக்கு குழந்தையும் இருக்கிறது.

இப்படியா நேரத்தில் தான், பட்டதாரி பெண்ணான 42 வயதான மங்களா தேவி என்ற பெண்ணுடன் டாட்டூ கலைஞர் வசந்த் ப்ரியனுக்கு அறிமுகம் ஏற்பட்டு, நாளடைவில் இது கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாச வாழ்க்கை வாழ தொடங்கினார்கள்.

அத்துடன்,     அவர்கள் இருவரும் அடிக்கடி காரில் ஊர் சுற்றுவது, சினிமா, பார்க் என்று ஒரு உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.

இப்படியான உல்லாச வாழ்க்கையில், தனது டாட்டூ தொழில் மூலமாக கிடைக்கும் வருமானம் அவருக்கு போதவில்லை. இதன் காரணமாக, அவர் வழிபறியில் ஈடுபட்டு, அதில் தனது கூட்டாளிகளை களமிறக்கியதும்” விசாரணையில் போலீசாருக்கு தெரிய வந்தது.

இதனையடுத்து, சென்னை அடுத்த பொன்னேரியில் பதுங்கியிருந்த வசந்த் ப்ரியனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், கள்ளக் காதலி மங்களா தேவி மற்றும் கூட்டாளி வினோத் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இந்த வழக்கில், வசந்த் ப்ரியன், கள்ளக் காதலி மங்களா தேவி உட்பட மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் 5 பேரிடம் இருந்தும் 15 ஆயிரம் ரூபாய் பணம், 15 சவரன் நகைகள், 5 செல்போன்கள், 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே, உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வழிப்பறியில் ஈடுபட்ட டாட்டூ கலைஞர் உட்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.