பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த இளம் பெண்ணை, 5 பேர் கொண்ட கும்பல் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கொடூரம் சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

மதுரையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மதுரை எல்லீஸ் நகர் ஹவுசிங் போர்டு குடியிருப்பில் இருக்கும் குறிப்பிட்ட ஒரு வீட்டில் வெளியாட்கள் அடிக்கடி அதிக அளவில் வந்து சென்று உள்ளனர். இதனால், அந்த குடியிருப்பில் உள்ள மற்ற குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு பெரும் சந்தேகம் எழுந்து உள்ளது.

அத்துடன், வந்து செல்பவர்கள் முகங்கள் எல்லாம், பயப்படும் அளவில் இருந்ததால், சற்று பயந்து போன அந்த குடியிருப்பு வாசிகள், சிலர் “என்ன நடக்கிறது?” என்று கவனிக்கத் தொடங்கி உள்ளனர். 

அதன் படி, அந்த குடியிருப்பின் குறிப்பிட்ட ஒரு வீட்டில் விபச்சாரத் தொழில் நடப்பது, அந்த குடியிருப்பு வாசிகளுக்குத் தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த குடியிருப்பு வாசிகள், “குறிப்பிட்ட ஒரு வீட்டில் விபச்சாரத் தொழில் நடப்பதாக” மதுரை எஸ்எஸ் காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். 

இந்த புகார் குறித்து விரைந்து வந்த மதுரை எஸ்எஸ் காலனி போலீசார், ஆள் கடத்தல் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்குத் தகவல் கூறிவிட்டு, அவர்கள் உதவியுடன், சம்மந்தப்பட்ட குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டிற்குள் ஒரு வாடிக்கையாளரைப் போலவே, போலீசார் சென்று உள்ளனர்.

அப்போது, அந்த வீட்டில் சோதனையில் ஈடுபட்ட போலீசார், அந்த வீட்டில் ராணி என்கிற அழகம்மாள், ரைமான் பீவி, ரமேஷ், நிசாந்த், ராமசாமி ஆகிய 5 பேர் கொண்ட கும்பலை கையும் களவுமாகப் பிடித்து, அதிரடியாகக் கைது செய்தனர்.

அத்துடன், அங்கிருந்து 20 வயது பெண்ணையும் போலீசார் பத்திரமாக மீட்டு உள்ளனர். அந்த 20 வயது இளம் பெண்ணை, அந்த கும்பல் கட்டாயப்படுத்தி  பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்தது. 

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், “அந்த இளம் பெண், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், பெற்றோர்களிடம் சண்டையிட்டு வெளியூருக்கு வேலை தேடி வந்து உள்ளார். அப்போது, இந்த கும்பலிடம் சிக்கிய அந்த பெண்ணை, கடந்த சில மாதங்களாக இந்த வீட்டில் அடைத்து வைத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும்” விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து, அந்த கும்பலிடம் சிக்கித் தவித்த அந்த பெண்ணை மீட்ட போலீசார், அந்த இளம் பெண்ணின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனர். அத்துடன், மீட்கப்பட்ட இளம் பெண்ணை, அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். இச்சம்பவம், மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.