இந்தியாவில் விமான நிலையங்களை மேம்படுத்த 2300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 20 லட்சம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும் என்று, கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி அறிவித்தார். 

4th tranche of economic package

அதன்படி, பிரதமரின் ‘சுயசார்பு’ திட்டத்தின் 4 ஆம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது வெளியிட்டார். 

அதில், “சுயசார்பு பாரதத்தை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார் என்றும், சுயசார்பு பாரதத்தை உருவாக்கப் பல போட்டிகளை எதிர்கொள்ள வேண்டும்” என்றும் குறிப்பிட்டார். 

“ஜி.எஸ்.டி போன்ற முக்கியமான சீர்திருத்தங்களைப் பிரதமர் கொண்டு வந்திருக்கிறார் என்று குறிப்பிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டில் தொழில் துறை வளர்ச்சி பெற கொள்கை சீர்திருத்தங்கள் அவசியம்” என்றும் கூறினார். 

“கடந்த சில ஆண்டுகளாக வலிமையான சீர்திருத்தங்களை பிரதமர் கொண்டு வருவதாகவும், ஜி.எஸ்.டி போன்ற வரி சீர்திருத்தங்களால் முதலீடுகளை ஈர்க்கும் நாடாக இந்தியா திகழ்வதாகவும்” புகழாரம் சூட்டினார். 

மேலும், “சுயசார்பு என்பது தனிமைப்படுத்திக் கொள்வதற்கான கொள்கை அல்ல என்று விளக்கம் அளித்த நிர்மலா சீதாராமன், சுயசார்பு இந்தியா என்பது இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற கொள்கையைத் தீர்க்கமாகக் கொண்டது என்றும், போட்டியைச் சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும் கூறினார்.

“நாடு முழுவதும் தொழில் பூங்காக்கள் தரவரிசைப்படுத்தப்படும் என்றும், தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கான 5 லட்சம் ஹெக்டேர் நிலம் கையிருப்பில் உள்ளதாகவும்”  நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

4th tranche of economic package

“நிலக்கரி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கத் திட்டம் உள்ளதாகவும், நிலக்கரி இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கத் தன்னிறைவு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நிலக்கரித்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

“சுரங்கங்களில் உள்ள கனிமப் பொருட்களை பிரித்து எடுக்க ஒருங்கிணைந்த ஒப்பந்தங்கள் செய்யப்படும் என்றும், 500 கனிமச் சுரங்கங்கள் வெளிப்படையாக ஏலம் விடப்படும்” என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

“நாட்டில் தொழில்துறை வளர்ச்சி பெற கொள்கை சீர்திருத்தங்கள் தேவை என்றும், நிறைய துறைகளில் விதிமுறைகள், பங்களிப்புகள் எளிமையாக இருக்க வேண்டும் என விரும்புவதாகவும்” அவர் குறிப்பிட்டார்.

“ராணுவத் தளவாட உற்பத்தியில் தன்னிறைவை எட்டும் வகையில் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் பயன்படுத்தப்படும் என்றும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்பு உதிரி பாகங்கள் இனி உள்நாட்டில் தயாரிக்கப்படும்” என்றும் நிர்மலா சீதாராமன் உறுதிப்படத் தெரிவித்தார்.

அதேபோல், “பாதுகாப்புத்துறைக்கான உபகரணங்களைத் தயாரிக்க அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதம் வரை அதிகரிப்பு” செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

“சாதாரண குடிமகனும் வெடிபொருள் தொழிற்சாலை சார்ந்த பங்குகளை வாங்க முடியும் என்றும், இதனால் ஆயுதங்களை இறக்குமதி செய்வதால் ஆகும் செலவுகள் இனி மிச்சமாகும்” என்றும், அவர் குறிப்பிட்டார்.

“விமானப் போக்குவரத்து செலவீனங்களை ரூ.1000 கோடி வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தனியார் பங்களிப்புடன் சர்வதேச தரத்தில் கூடுதல் விமான நிலையங்கள் ஏற்படுத்தப்படும்” என்றும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கைத் தெரிவித்தார். 

“விமான பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு மையமாக இந்தியா திகழ நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், விமான நிலையங்களை மேம்படுத்த 2300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், குறிப்பாக நாட்டில் மேலும் 6 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும்” என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

“இந்திய வான்வெளி விமானப் பாதைகள் தொடர்பாகத் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்றும், வான் எல்லையைத் தாராளமாகப் பயன்படுத்த அனுமதி அளிப்பதன் மூலமாக விமானங்களுக்கு எரிபொருளும், பயண நேரமும் குறையும்” என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

குறிப்பாக, “புதுச்சேரி உள்ளிட்ட 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்சார விநியோக நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் என்றும், இதன்மூலம் மின்சார விநியோகம் மேம்படுவதுடன் அதன் தரமும் உயரும் என்றும், மின் பகிர்மான நிறுவங்களுக்கான புதிய வரி விதிப்பு முறைகள் அறிமுகப்படுத்தப்படும்” என்றும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.