21 வயது கல்லூரி மாணவனுடன், 45 வயது பெண்மணி ஒருவர் வீட்டை விட்டு ஓடிப்போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்து உள்ள ஆசாரிப்பள்ளம் காந்தி காலணியைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர், தனது குடும்பத்துடன் வசித்து 
வந்தார். இவரது கணவர், அந்த பகுதியில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இந்த தம்பதிக்கு, ஒரு ஆண், ஒரு பெண் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இப்படியான சூழ்நிலையில், கணவரின் வருமானத்தில் குடும்பத்தை நடத்த சிரமப்பட்ட அந்த பெண், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனது குடும்பத்தை மிகவும் சிரமப்பட்டு நடத்தி வந்தார். 

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தார் இவர்களுக்குப் பல உதவிகளைச் செய்து வந்தனர். தொடர்ச்சியாக, அந்த குடும்பத்தினர் உதவிகள் செய்து வந்ததால், இந்த குடும்பத்தில் ஒரு குடும்ப உறுப்பினர் போலவே உதவி செய்த குடும்பத்தினர் மாறிப்போனார்கள். 

அத்துடன், உதவி செய்த குடும்பத்தில் 21 வயதில் கல்லூரியில் படிக்கும் ஒரு இளைஞன் இருந்தான். அவனும், அந்த சிரமப்படும் குடும்பத்துக்குப் பல உதவிகளைத் தொடர்ந்து செய்து வந்தான்.

அப்போது, கல்லூரி படிக்கும் அந்த இளைஞனுக்கும், கஷ்டப்படும் குடும்பத்தைச் சேர்ந்த அந்த 45 வயது பெண்ணிற்கும் இடையே சற்று நெருக்கம் அதிகரித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், கடந்த சில தினங்களுக்கு முன்பு உதவி செய்து வந்த வீட்டைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவனும் திடீரென்று மாயமாகி உள்ளார். 

அதே நேரம், இங்கே கஷ்டப்படும் குடும்பத்தில் அந்த 45 வயது பெண்ணையும் காணவில்லை என்று, இரு வீட்டாரும் தங்களது குடும்ப உறுப்பினர்களைத் தேடி அலைந்து உள்ளனர்.

அவர்களோடு சேர்ந்த அந்த ஊர் மக்களும், அந்த குடும்பத்தாரும் சேர்ந்து இருவரையும் தேடி வந்தார்கள். அப்போது, அந்த 21 வயது கல்லூரி இளைஞரும், 45 வயது பெண்மணியும் தனித்தனி ஆட்டோவில் வந்து, அங்கு உள்ள காந்தி காலணியில் இருந்து ஆசாரிப்பள்ளம் பேருந்து நிறுத்ததுக்கு வந்ததும், அங்கிருந்து 2 பேரும் மினி பஸ்சில் நாகர்கோவிலுக்கு சென்று ஓடிப்போனதும் தெரியவந்தது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த இரு வீட்டாரும், அப்படியே நொறுங்கிப் போனார்கள். இதனையடுத்து, இது தொடர்பாகக் கல்லூரி மாணவனின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பெயரில், வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.

இந்த விசாரணையில், அந்த மாணவனுக்கும், அந்த 45 வயது பெண்ணுக்கும் இடையே கள்ளக் காதல் இருந்து வந்தது தெரிய வந்தது. இதனால், இருவரின் குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

குறிப்பாக, அந்த 45 வயது பெண், இரவு நேரத்தில் தனது மகள், மகனை அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கும், கணவரை இன்னொரு உறவினர் வீட்டிற்கும் கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்துவிட்டு, தனது கள்ளக் காதலான கல்லூரி மாணவனுடன் வீடியோ காலில் விடிய விடியப் பேசி வந்ததும் தெரிய வந்தது. 

இந்த விசயத்தை எப்படியோ தெரிந்துகொண்ட அந்த பெண்ணின் மகள், தனது தாயாரை வன்மையாகக் கண்டித்து இருக்கிறார். அப்போது, தனது மகளைச் சமாதான படுத்திவிட்டு, மீண்டும் அந்த பெண், தனது கள்ளக் காதலைத் தொடர்ந்துகொண்டே வந்ததாகவும் கூறப்படுகிறது. போலீசார், இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, 21 வயது கல்லூரி மாணவனுடன், 45 வயது பெண்மணி ஒருவர். வீட்டை விட்டு ஓடிப்போன சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.