தமிழகத்தில், இந்த கல்வியாண்டு முழுக்கவே பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கிறது. காலவரையற்ற இந்த மூடல், கொரோனா பரவல் அச்சத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொரோனா இனி வரும் காலத்திலும் எப்போது திறக்கப்படும் என்பது நிச்சயமில்லாமல் இருக்கிறது. ஆகவே பள்ளிகள் திறக்கப்படுவது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இருப்பினும் கல்வியாண்டை அப்படியே விடமுடியாது என்பதால், கல்வி நிலையங்கள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் இன்று ஈரோட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பள்ளி சார்ந்த சில முக்கியமான விஷயங்கள் குறித்து பேசினார். அப்படி அமைச்சர் செங்கோட்டையன் கூறியவை இங்கே...

``நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்துதான் 90 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. எத்தனை போட்டித்தேர்வு வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் உருவாக்குவோம். சனிக்கிழமைகளில் கல்வித்தொலைக்காட்சியில் 6 மணி நேரம் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும்.

கொரோனா காலத்திற்கு பிறகு விளையாட்டுத்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும். சிறப்பாசிரியர்களாக சேர்ந்த தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பு இல்லை.

கொரோனா ஊரடங்கினால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில், மாணவர்களின் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் 40 சதவீத பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன"

என்று கூறியுள்ளார்

முன்னதாக நேற்றைய தினம் இந்தியாவில் உள்ள பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் பள்ளிக் கல்வி குறித்து ஆக்ஸ்பாம் அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் குறிப்பிட்ட 5 மாநிலங்களில் 80 சதவிகித அரசுப் பள்ளி மாணவர்கள் எந்தவகையிலும் தங்களது பள்ளிக்கல்வியைத் தொடர முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்தில் இரண்டு ஆசிரியர்களுக்கு இணைய வழிக் கல்வியை மேற்கொள்வதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும், 20 சதவிகித அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமே இணையவழிக் கல்வியைக் கற்பிப்பதற்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும் பொதுமுடக்கக் காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதை உறுதி செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், ஐந்து மாநிலங்களிலும் 65 சதவீத மாணவர்கள் மட்டுமே மதிய உணவைப் பெற்றுள்ளனர். அதேபோல் உத்தரப்பிரதேசத்தில் 50 சதவிகித பெற்றோர்கள் வழக்கமானக் பள்ளிக்கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டணம் செலுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவின் 5 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் 80 சதவிகிதமான அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தகைய முறையிலும் கல்வியை பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது.

வசதிகளற்ற மாணவர்கள் ஒருபக்கம் இவ்வளவு பாடுபட, இந்த ஆண்ட்ராய்டு வசதிகள் இருந்து - இணையம் வழியாக கல்வியை பெறும் மாணவர்களுக்கும் பல்வேறு பிரச்னைகள் இருக்கிறது. குறிப்பாக கற்றலில் நிறைய சிக்கல் இருப்பதாக மாணவர்கள் குற்றம் கூறி வருகின்றனர்.

தமிழகம், இந்தப் பிரச்னைகளையெல்லாம் தகர்க்கவே, பாடத்திட்டத்தை குறைத்து இருக்கிறது என்று கல்வியாளர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர். அந்தவகையில், இது மிகவும் வரவேற்கத்தக்க முடிவாக பார்க்கப்படுகிறது.