ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட 3 பேர் வெற்றி பெற்று உள்ளனர்.

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

சரியாக 138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. 

இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது 74 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், தொடக்கம் முதலே திமுக முன்னிலை வகித்து வருகிறது.

இந்த தேர்தலில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் இந்த முறை களமிறங்கியது. 

அத்துடன், நடிகர் விஜய்யின் அனுமதியுடன் அவரது புகைப்படத்தினை அச்சிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் இந்த முறை தேர்தல் பிரச்சாரம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

அதன் படி, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்கள் என்று பல்வேறு இடங்களில் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். 

அதன் படி, விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்டவர்களில் தற்போது 2 பேர் வார்டு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

அதன் படி, இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், மாமண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடப்பாடி 4 வது ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்ட ரீனா புருஷோத்தமன் வெற்றி பெற்று உள்ளார்.  

அதே போல், மாமண்டூர் 2 வது ஊராட்சியில் 2 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட லோகநாதன் வெற்றி பெற்று உள்ளார்.

குறிப்பாக, காஞ்சிபுரம் கருப்படித்தட்டை, காந்தி நகர் 1 வது வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் ரசிகர் மன்ற நகர செயலாளர் எம்.பிரபு   ஒரு வாக்கு வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று உள்ளார். 

ஆக மொத்தமாக தற்போதைய நிலவரப்படி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்டவர்களில் தற்போது வரை 3 பேர் வெற்றி பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.