தமிழகம் முழுவதும் கடந்த 36 மணி நேரத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 5 துப்பாக்கிகள், 934 அரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் பழிக்குப்பழி கொலைகள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாகவும், கூலிப்படைகள் மூலமாக தலையைத் துண்டித்து கொடூரமாகக் கொலைகள் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகப் புகார்கள் எழுந்தன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் கூட பெண் ஒருவர் தலை துண்டித்து பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். 

இதனால், ரவுடிகளின் கொட்டத்தை அடக்க அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் சென்னை உள்பட மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

அதன் படி, தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் ஆகியோரது உத்தரவின்பேரில், மண்டல ஐஜிக்கள் சந்தோஷ்குமார், சுதாகர், பாலகிருஷ்ணன், அன்பு மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட மாநகர போலீஸ் கமிஷனர்கள், அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் ஆகியோரது தலைமையில் போலீசார் கடந்த 2 நாட்களாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

அதாவது, தமிழகம் முழுவதும் குற்றச் செயல்களை அடியோடு ஒழிக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் போலீசார் நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் ரவுடி ஒழிப்பு நடவடிக்கையை இன்னும் தீவிரப்படுத்தினர். 

குறிப்பாக, தமிழகம் முழுவதும் கடந்த 23 ஆம் தேதி இரவு முதல் Storming Operation எனப்படும் முற்றுகைச் செயல்பாடு ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது. 

இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் கடந்த 36 மணி நேரத்தில் 16,370 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 

இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் திருத்தி வாழ்பவர்கள் தவிர மற்றபடி மொத்தம் 2,512 ரவுடிகள் கைது அதிரடியாக செய்யப்பட்டனர். 

இவர்களில் 244 ரவுடிகள் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளின் பிடியாணையின் படி கைதானார்கள் என்றும், பல்வேறு குற்ற வழக்குகளுக்காக 733 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அத்துடன், 1,927 ரவுடிகளிடமிருந்து நன்னடத்தைக்காகப் பிணை ஆணை பெறப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளனர். 

மிக முக்கியமாக, தற்போது கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து 5 நாட்டுத் துப்பாக்கிகள், 929 கத்திகள் உள்ளிட்ட பிற ஆயுதங்கள் என, மொத்தம் 934 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.