தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ உள்ளிட்ட 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில், அவர் மீது 250 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

சென்னை பாரிமுனையில் தடகள பயிற்சியாளரான 59 வயதான நாகராஜன் என்பவர், சொந்தமாக விளையாட்டு பயிற்சி மையத்தை நடத்தி வந்தார்.

மத்திய அரசின் ஜி.ஸ்.டி. வரி கண்காணிப்பாளராக பணியாற்றிய நாகராஜன், “சென்னை பிரைம்” என்ற பெயரில், தடகள பயிற்சி மையத்தை நடத்தி வந்தார். 

இந்த பயிற்சி மையத்தின் மூலமாக சென்னை பாரிமுனை பேருந்து நிலையத்தை ஒட்டி உள்ள பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான மைதானத்தில் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு அவர் பயிற்சி அளித்து வந்தார்.

இந்த விளையாட்டு பயிற்சி மையத்தில், தடகள வீராங்கனையாக சாதிக்க வேண்டும் என்று கனவுகளுடன், அதே சமயம், பொருளாதார வசதிகள் இல்லாத ஏழை மாணவிகள் ஏராளமானோர் அங்கேயே தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். 

இந்த பயிற்சி மையத்தில், மிகவும் ஏழை மாணவிகளாக உள்ளவர்களுக்கு, பயிற்சியாளர் நாகராஜன் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் என்று குற்றச்சாட்டு தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வந்தது. 

இதனால், அங்கு பாலியல் தொல்லைக்கு ஆளாகும் ஏழை மாணவிகள் ஏராளமானோர், வேறு ஒரு பயிற்சி மையத்திற்கு மாற முடியாமலும், பாலியல் தொந்தரவை வெளியே வேறு யாரிடமும் கூற முடியாமலும் சிக்கித் தவித்து வந்தனர்.

குறிப்பாக, பயிற்சியாளர் நாகராஜன், சென்னை ஒய்.எம்.சி.ஏவில் உள்ள தன்னுடைய வீட்டில் வைத்து 16 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த போது, அந்த பெண் நாகராஜனை கொலை செய்ய முயன்றதும், தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.

பயிற்சியாளர் நாகராஜன், 20 க்கும் மேற்பட்ட ஏழை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளாராகவும் கூறப்பட்டது.

இதன் காரணமாக, பயிற்சியாளர் நாகராஜனால் பாலியல் தொந்தரவுக்குள்ளான வீராங்கனைகள் பலர், விளையாட்டிலிருந்து தற்போது வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியானது.

இப்படியான சூழ்நிலையில் தான், தனியார் விளையாட்டு பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன், 20 க்கும் மேற்பட்ட பயிற்சி மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர், தமிழ்நாடு மாநில தடகள சம்மேளனத்தில் புகார் அளித்தார். 

பின்னர்,  நாகராஜன் மீது அவரிடம் பயிற்சி பெற்ற வீராங்கனை ஒருவர் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். 

அந்த புகார் மனுவில், “பிசியோதெரபி பயிற்சி அளிப்பதாகக் கூறி நாகராஜன், பலரிடமும் செக்ஸ் சேட்டையில் ஈடுபட்டார்” என்றும், குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சென்னை பூக்கடை அனைத்து மகளிர் போலீசார், அவர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக, நாகராஜன் மீது பாதிக்கப்பட்ட மேலும் பல வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, பயிற்சியாளர் நாகராஜன் திடீரென தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற நிலையில், அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் தான், தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது சென்னை போக்சோ நீதிமன்றத்தில் இன்று 250 பக்க குற்றப்பத்திரிகையைத் தனிப்படை போலீசார் தாக்கல் செய்து உள்ளனர்.