தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மறைமுக தேர்தல் நேற்றைய தினம் நடைபெற்ற நிலையில், சில பகுதிகளில் பல விதமான சுவாரஸ்யங்கள் நடைபெற்றன. அந்த சுவாரஸ்யங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளிலும் துணை மேயர் பதவிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. இது தொடர்பான மறைமுக தேர்தல் நேற்றைய தினம் நடைபெற்ற நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட குறிப்பிடட சில இடங்களில் திமுகவினர், கட்சியின் உத்தரவை மீறி சில இடங்களில் வேட்பாளர்களாக களமிறங்கி வெற்றிப் பெற்றது பெரும் சர்ச்சையாக வெடித்தது. 

இது ஒரு புறம் என்றால், மற்றொரு புறம் ஊர் மக்களே வியக்கும் அளவுக்கு சில ஊர்களில் தம்பதிகளாகவும், குடும்பமாகவும், பேரூராட்சி தேர்தலில் பதவி ஏற்று சில சுவாரஸ்யங்களும் அரங்கேறின.

அந்த வகையில், தர்மபுரி மாவட்டம் அரூர்  பஞ்சாயத்தில் மொத்த 18 வார்டுகளில் 7 அதிமுக, 7 திமுக என சமமாக வெற்றி பெற்று உள்ளனர். பாமக 2, சுயாட்சிகள் 2  வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பொதுப்பிரிவு பெண்களுக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது.

இதில், நேற்றைய தினம் தலைவர் பதவிக்கு நடைபெற்ற மறைமுக தேர்தலில், திமுக சார்பாக சூர்யா தனபால் மனைவி இந்திராணியும், அதிமுக சார்பில் நிவேதா என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 

இதில், 18 வார்டு உறுப்பினர்களும் தங்களது வாக்கை பதிவு செய்தனர். பிறகு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்ற நிலையில், திமுக 12 வாக்குகளும், அதிமுக 6 வாக்குகளும் பெற்றன. 

அதன் படி, அதிக வாக்கு பெற்ற திமுக வேட்பாளர் இந்திராணி வெற்றி பெற்று தலைவர் பதவியை கைப்பற்றினார். அதன் தொடர்ச்சியாக, பிற்பகல் நேரத்தில், நடைபெற்ற துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில், திமுக சார்பில் சூர்யா தனபால் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, அதிமுக சார்பில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி துணைத் தலைவராக வெற்றி பெற்றார்.

இதனால், சூர்யா தனபால் வெற்றி பெற்றதன் மூலம், இவரது மனைவி தலைவராகவும், அவர் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

அதே போல், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி தேர்தலில் 15 வது வார்டு உறுப்பினராக திமுக நகர செயலாளர் கணேசமூர்த்தி மருமகள் ஆனந்திவசந்த் போட்டியிட்டார். 

அதே போல், 17 வது வார்டில் நகர செயலாளர் கணேசமூர்த்தி போட்டியிட்டார். இதில், மாமனாரை விட, மருமகள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த சூழலில் தான், நேற்று பேரூராட்சி தலைவருக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில, திமுக நகர செயலாளரான கணேசமூர்த்தி போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, மன்ற உறுப்பினர் அனைவருக்கும் அவருக்கு சால்வை அணிவித்த நிலையில், சக உறுப்பினர்களில் ஒருவரான அவரது மருமகளும், தனது மாமனாருக்கு சால்வை அணிவித்தார்.

பின்னர், கணேசமூர்த்தி தனது வீட்டிற்கு திரும்பிய நிலையில், அங்கு 15 வது வார்டு உறுப்பினரான அவரது மருமகளே, பேரூராட்சி தலைவரான தனது மாமனாருக்கு ஆரத்தி எடுத்து, நெற்றியில் பொட்டு வைத்து சிறப்பான வரவேற்பு அளித்து தனது வீட்டுக்கும் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்த நிலையில், அதன் தொடர்ச்சியாக, தனது மாமனாரிடம் அவர் ஆசீர்வாதம் பெற்றார். இந்த நிகழ்வு காட்டுமன்னார்கோயில் பகுதியில் பெரும் சுவாரஸ்யமாக அமைந்திருந்தது.

குறிப்பாக,  ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு கடந்த 2 முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற நிலையில், தற்போது 3 வது முறையாக போட்டியிட்டு வெற்றிப் பெற்ற நிலையில், அவர் ஒருமனதாக நகர்மன்றத் தலைவராக தேர்வாகி உள்ளார். அப்போது, அவரின் மனைவி கட்டித்தழுவி அவரின் நெஞ்சில் சாய்ந்து ஆனந்தக்கண்ணீர் விட்டது, அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.

அதே போல், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் சுந்தரத்தின் மருமகளை குலுக்கல் முறையில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகலிங்கத்தின் மருமகளும், நகர செயலாளர் மனைவியுமான ருக்மணி மோகன்ராஜ், எதிர்த்துப் போட்டியிட்டு குலுக்கல் முறையில் வெற்றி பெற்றார். இது, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும், செங்கோட்டை நகராட்சி தலைவர் தேர்தலில், அதிமுக ஆதரவு வெற்ற சுயேட்சை கவுன்சிலர் ராமலட்சுமி, வெற்றி பெற்று உள்ளார்.

அதே போல், திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி தலைவர் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த சுதா 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இங்கு, மெஜாரிட்டி இருந்தும் திமுக தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.