தமிழகத்தில், இலங்கை அகதி பெண்ணை 2 பேர் அடுத்தடுத்த நாள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்து உள்ள தும்பல அள்ளி இலங்கை அகதிகள் முகாம் பகுதியைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர், தனது கணவருடன் வசித்து வந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவனைப் பிரிந்து தனது மகனுடன் வசித்து வருகிறார்.

கணவனைப் பிரிந்த இந்த 34 வயது பெண்ணிற்கு ஞாபகமறதி நோய் இருக்கிறது. இதனால், இந்த பெண் இரவில் எப்போதும் தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு விட்டு, தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இதனைத் தெரிந்துகொண்ட அதே பகுதியைச் சேர்ந்த 37 வயதான வண்ணம்பூசுநர் காண்டீபன் என்பவர், அந்த பெண்ணை எப்படியும் பலாத்காரம் செய்துவிட வேண்டும் என்று திட்டம் தீட்டியதாகத் தெரிகிறது.

அதன் படி, கடந்த 22 ஆம் தேதி இரவு அந்த பெண் வீட்டில் தனியாகத் தூங்கிக் கொண்டிருந்த போது, கடும் மது போதையில் அந்த வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்த வண்ணம்பூசுநர் காண்டீபன், அந்த பெண்ணை பலவந்தமாக வீட்டில் இருந்து தூக்கிக்கொண்டு, அங்குள்ள கால்வாய் பக்கம் தூக்கிச்சென்று உள்ளார்.

அங்கு, அந்த நடு ராத்திரி வேளையில் ஆட்கள் நடமாட்டம் யாரும் இல்லாததால், அந்த பெண்ணை அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

அந்த பெண்ணை, பலாத்கார செய்த பிறகு, “இது குறித்து வெளியே சொன்னால், உன்னை கொலை செய்து விடுவேன்” என்று, மிரட்டி, அந்த பெண்ணை அவர் அனுப்பி வைத்திருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, மறுநாள் காலையில், அந்த இலங்கை அகதி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக, அவனது கூட்டாளி ஆண்ட்ரிஸிடம், வண்ணம்பூசுநர் காண்டீபன் கூறி பெருமைப்பட்டு உள்ளார்.

இதனால், சபலப்பட்ட ஆண்ட்ரிஸ், “அந்த இலங்கை அகதி பெண்ணை, நாமும் எப்படியாவது பாலியல் பலாத்காரம் செய்துவிட வேண்டும்” என்று, திட்டம் போட்டு இருக்கிறார்.

அதன் படியே, அன்றைய தினமே அதாவது ஜூன் 23 ஆம் தேதி இரவு, அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்ற ஆண்ட்ரிஸ், அந்த பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், இவரும் அந்த பெண்ணிற்குக் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இப்படியாக, இலங்கை அகதி பெண் ஒருவர், அடுத்தடுத்து 2  நாட்கள், 2 நபர்களால் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால், கடுமையாகப் பாதிக்கப்பட்ட அந்த பெண், இது குறித்து காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், வண்ணம்பூசுநர் காண்டீபன், ஆண்ட்ரிஸ் ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். 

இவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு, இருவரையும் அங்குள்ள பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி, அவர்கள் இருவரையும் சேலம் மத்தியச் சிறையில் போலீசார் அடைத்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.