நாமக்கல் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த சிறுமியின் பெற்றோர், காதலித்தவரைத் திருமணம் செய்து வைக்காத விரக்தியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சேலம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராம்ராஜ் என்பவரின் மகள் 17 வயதான அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்திருக்கிறார்.

இதனிடையே, அதே பகுதியில் கட்டட மேஸ்திரியாக வேலை செய்யும் தனது உறவினர் பிரபு என்பவரை, கடந்த சில ஆண்டுகளாக அமுதா காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இருவரும் நெருங்கிப் பழகிக் காதலித்து வந்த நிலையில், தன் காதல் விசயத்தை அந்த சிறுமி தன் பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனால், அமுதாவின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதன் அடுத்த அதிர்ச்சியாக, தன் காதலன் பிரபுவை உடனே தனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று, தன் பெற்றோரிடம் அமுதா கூறி உள்ளார். இதனால், இன்னும் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை சமாதானம் செய்துள்ளனர். இது தொடர்பாக, சிறுமி தன் பெற்றோரிடம் அடிக்கடி சண்டை போட்டுள்ளார்.

அப்போது, சிறுமியின் பெற்றோர் நிதானமாக, “அமுதா, உனக்கு இப்ப தான் 17 வயது நடக்கிறது. உனக்கு, முதலில் 18 வயது முடியட்டும். அதன் பிறகு,  திருமணம் செய்து வைப்பது தொடர்பாகப் பேசலாம். அதுவரை அந்த பையன் காத்திருந்தால், உனக்கு அவனையே திருமணம் செய்து வைக்கிறோம்” என்று, கூறி உள்ளனர்.

பெற்றோரின் இந்த சமாதான பேச்சை ஏற்க மறுத்த அந்த சிறுமி, தன் பெற்றோரிடம் மீண்டும் சண்டை போட்டு உள்ளார். பின்னர், அழுதுகொண்டே, தன் அறைக்குச் சென்று கதவைப் பூட்டிக்கொண்டார்.

இதனையடுத்து, நேற்று மீண்டும் தன் பெற்றோரிடம் இது தொடர்பாகப் பேசிய சிறுமி, “தன் காதலனுடன் உடனே திருமணம் செய்து வையுங்கள்” என்று மீண்டும் அவர் அடம் பிடித்துள்ளார். அதற்கு, சிறுமியின் பொற்றோர் மறுக்கவே, கடும் விரக்தியுடன் காணப்பட்டுள்ளார். 

இதனையடுத்து, சிறுமியின் வீட்டில் நேற்று அனைவரும் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, சிறுமி அமுதா கையை அறுத்தும், பின்னர் விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தையும் குடித்து உள்ளார். 

மாலையில், வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பிய சிறுமியின் பெற்றோர், மகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து, சிறுமியை மீட்டு ராசிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மாணவி அமுதாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறி உள்ளனர்.

இதனால், என்ன செய்வது என்று தெரியாமல், சிறுமியின் பெற்றோர் அழுது துடித்தனர். இதனால், அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது.

இதனிடையே, திருமணம் செய்து வைக்காத விரக்தியில், 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், ராசிபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.