சென்னையில் கொரோனாவுக்கு இன்று 10 பேர் பலி! தண்டையார்பேட்டையில் முழு ஊரடங்கு?
By Aruvi | Galatta | Jun 11, 2020, 01:20 pm

சென்னையில் கொரோனாவுக்கு இன்று மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தண்டையார்பேட்டையில் முழு ஊரடங்கு செயல்படுத்துவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்த உள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கொரோனா என்னும் பெருந்தொற்ற, சென்னையில் மையம் கொண்டு மிக தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால், தமிழகத்தின் பிற பகுதிகளைக் காட்டிலும், சென்னையில் கொரோனா தொற்ற எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதன்படி, சென்னையில் கொரோனாவால் பலியான கீழ்பாக்கத்தை சேர்ந்த 70 வயது மருத்துவர், மிண்ட் சாலையில் கிளினிக் நடத்தி வந்தார். அவர், பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்த நிலையில், கொரோனா தாக்கி உயிரிழந்துள்ளார்.
அதேபோல், சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், சென்னை அண்ணா சாலையை சேர்ந்த 66 வயது மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரும் தற்போது உயிரிழந்துள்ளார்.
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் ஐசிஎப் பகுதியைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இப்படியாக சென்னையில் இன்று மட்டும் கொரோனாவின் தாக்கத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் கொரோனா கோரத் தாண்டவம் ஆடி வருவதால், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தற்போது 360 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், கொரோனா பலி எண்ணிக்கையில் சென்னை ராயபுரம் மண்டலத்தில் 50யை கடந்துள்ளது. அங்கு, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 4,405யை கடந்துள்ளது.
அதேபோல், தண்டையார்பேட்டையில் 3405 பேரும், தேனாம்பேட்டையில் 3069 பேரும், கோடம்பாக்கத்தில் 2805 பேரும், திரு வி.க.நகரில் 2456 பேரும், அண்ணாநகரில் 2362 பேரும், அடையாறில் 1481 பேரும், வளசரவாக்கத்தில் 1170 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில், 35 குழந்தைகளுக்கு கொரோனா ஏற்பட்டது குறித்து தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னையில் ராயபுரம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை மண்டலங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக, கொரொனா தொற்று அதிகம் காணப்படும் சென்னை தண்டையார்பேட்டை உள்ளிட்ட மண்டலங்களை ஊரடங்கை முழுமையாக அமல்படுத்துவது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்த உள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சென்னையில் நோய் தொற்றை குறைக்க பொதுமுடக்கம் தீவிரப்படுத்தப்படுமா? என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.