நிவர் புயல் தன்னுடைய ஆட்டத்தை ஆடிவிட்டு சென்றிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். நாம் சமீபத்தில் அடிக்கடி கடந்து வருகின்ற செய்தி -  அங்கே புயல் சின்னம் உருவாகியிருக்கிறது, இங்கே புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது, அந்த மாவட்டத்தில் 6ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது, இந்த மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது என்று பல்வேறு அறிவிப்புகள். ஆனால் நாம் ஏன் இவற்றைக் கடந்து செல்கின்றோம்? ஏனென்றால் நம்ம ஊருக்கு வருதா? இல்லையப்பா இது வேறு ஊரில் என்று கடந்து சென்றுவிடுகிறோம். இன்றைக்கு ஒரு ஊருக்கு என்றால் நாளை நம் ஊருக்கும் வரும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புயல் தாக்கும் என்று எங்காவது கேள்விப்பட்டிருக்கோமா?, கஜா புயல் திண்டுக்கல் மாவட்டத்தை கடந்து கேரளவிற்குள் சென்று அரபிக் பெருங்கடலுக்கு சென்று ஆப்ரிக்க கண்டத்திற்குப்போய் தான் வலுவிழந்தது.

நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய சில விவரங்கள் இருக்கின்றன. புயல்கள் ஏன் அதிகரிக்கின்றன, அவற்றின் தீவிரத் தன்மை ஏன் கூடுகிறது? அதுவும் குறைந்த நேரத்தில் ஏன் தீவிரமாகிறது? என்பது குறித்து விரிவான பார்வை.

cyclone

நிவர் புயல் – தற்போது தமிழகத்தை மிரட்டியும் புரட்டியும் போட்டிருக்கிறது. இந்த நிவர் புயலானது கடந்த 6 ஆண்டுகளில் தமிழகம் சந்திக்கும் 5வது புயலாகும்.1890ம் ஆண்டு முதல் 2002 வரை அதாவது 112 ஆண்டுகளில் தமிழகம் 54 புயல்களை சந்தித்திருக்கிறது.

அதற்கு பின்னர் 2002 முதல் 2018 வரை தமிழகம் சந்தித்த புயல்களின் எண்ணிக்கை 10. தமிழகம் கடந்த 6-7 வருடங்களில் தொடர்ச்சியாக ஆண்டுக்கு ஒரு புயலை சந்தித்துக் கொண்டிருக்கிறது. தானே,நீலம், ஒக்கி , வர்தா, கஜா இப்போது கடைசியாக நிவர் புயல்.

புயல்களின் எண்ணிக்கைகள் அதிகரித்து வருகின்றது, அதுபோல் புயல்களின் தாக்கமும் அதிகரித்து வருகிறது , இன்னும் சொல்லப்போனால் இந்த புயல்களின் தன்மைகளை கணிப்பதுக் கூட சிரமமாகியுள்ளது.

cyclone

இதற்கெல்லாம் என்ன காரணம்? காலநிலை மாற்றம்தான் காரணம்.

இந்த காலநிலை ஏன் மாறுகிறது? தொழிற்புரட்சிக்கு பின்னரான காலகட்டத்தில் நாம் புதைப்படிம எரிபொருளை எரித்து நாம் உமிழும் கார்பன்தான் இதற்கு காரணம்.

உலகமயமாக்கல் , தாராளமயமாக்கல் என்று மக்கள் ஓடிக்கொண்டிருக்க சுற்றுசூழலை பாதுகாப்பதும் நமது கடமை என்பதை மறந்துவிட்டார்கள். நாம் உமிழும் பசுமை இல்லக் குடிவாயுக்கள் வெளியேறி  பெருங்கடல்களால் அவை உள்வாங்கிக் கொள்ளப் படுகின்றன. இவ்வாறு உள்வாங்கிக் கொள்வதினால் பெருங்கடல்களின் வெப்பம் அதிகரிக்கின்றது, (seasurface temperature). இது ஒரு chain process எனப்படும் தொடர்நிகழ்வுகள்தான். ஒன்று அதிகரித்தால் அனைத்திலும் அதன் தாக்கம் இருக்கத்தான் செய்யும்.

கடல்மேற்பரப்பு வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருந்தால் அதனால் atmospheric disturbance எனப்படும் வளிமண்டல சலனம் ஏற்படும். ஒரு புயல் உருவாவதற்கு முக்கிய காரணம் இந்த வளிமண்டல சலனம்தான். வளிமண்டலத்தில் ஏற்படக்கூடிய இம்மாதிரியான மாற்றங்களால்தான் Depression எனப்படும் காற்றழுத்தத் தாழ்வுநிலை பகுதி ஏற்பட்டு பின்னர் அதுவே வலுபெற்று காற்றழுத்தத் தாழ்வுநிலை மண்டலமாக உருமாறுகிறது.

cyclone

வளிமண்டல சலனம் ஏற்படுவதற்கு கடலின் மேற்பரப்பு வெப்பநிலையானது 26.6˚ செல்சியஸ் அதாவது 80ஃபேரன்ஹீட்டிற்கும் அதிகமாக இருத்தல் வேண்டும், மேலும் ஈரப்பதம் வேண்டும். ஆனால் தற்போது நமக்கு இங்கு கடலின் மேற்பரப்பு வெப்பநிலையானது 29˚ - 31˚டிக்ரி வரை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி கடலின் வெப்பம் தொடர்ந்து அதிகரிப்பதால் கடல்நீர் அதிகமாக நீராவியாகி வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகரித்து வருகிறது. கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து, வளிமண்டலத்தில் ஈரப்பதமும் அதிகரித்து மெல்லிய பருவ காற்று என இவை எல்லாம் சேரும் போது புயல் உருவாகிறது.

பெருங்கடலின் வெப்பம் நீண்ட நாட்களாகவே அதிகரித்து வருவதால் புயல்களின் என்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. அதுமட்டிமின்றி முக்கியமாக பார்க்க வேண்டியது என்னவென்றால் புயலின் தீவிரத்தன்மை. கடந்த 5 புயல்கள் செய்த கலவரத்தில் அவற்றின் தீவிரம் குறித்து நாம் உணர்ந்திருப்போம். அதிகமாக கடல்நீர் நீராவியாவதால் இந்த புயலானது அடிக்கும் போது அதனுள்ளே பெருமளவில் நீரையும் கொண்டு வருகிறது. இதனால்தான் புயல் கரையைக் கடக்கும்போது கோரத்தாண்டவமாடுகின்றன.

இதுமட்டுமில்லாமல் , உலகின் வெப்பநிலை அதிகரித்தல் காரணமாக துருவங்களில் இருக்கக்கூடிய பனி மலைகள் உருகுவதனாலும் இயற்கையாகவே கடலின் மட்டம் உயர்ந்துவருகிறது. கடல் மட்டம் உயருவதற்கான மற்றொரு காரணம் thermal expansion,அதாவது வெப்பம் காரணமாக தண்ணீர் (molecules) விரிவடையும். கடலின் மட்டம் ஏற்கனவே உயர்ந்துக் கொண்டிருக்கும் நிலையில் புயலும் சேரும் போதுதான் அசுர அலைகள் தாக்குகின்றது.

புயல்கள் உருவாவதற்கு முக்கிய காரணமாக இருப்பது காலநிலை மாற்றம்தான். அதுவும் தற்போது உள்ள புயல்களின் போக்கையே கணிக்க மிகவும் சிரமமாக உள்ளது. ஃபானி புயல் தாக்கியபோது 4 முதல் 7 நாட்களில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில் ஃபானி புயல் கரையை கடப்பதற்கு 11 நாட்கள் ஆனது. அதேப் போல் ஒரு இடத்தில் காற்றழுத்தத் தாழ்வுநிலை ஏற்பட்டால் அது புயலாக உருவாக குறைந்தது 40 மணி நேரமாவது ஆகும். ஆனால் ஒக்கி புயலானது காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி வெறும் 6 முதல் 9 மணி நேரத்திற்குள்ளேயே புயலாக உருமாறியது.

பேரிடர் மேலாண்மை ஆனையத்தின் பணி என்பது பேரிடர் காலத்தில் மக்களை மீட்டு , நிவாரணம் வழங்கி, அவர்களை சமுதாயக் கூடங்களில் தங்க வைப்பது மட்டுமல்ல பேரிடர்களை எப்படி குறைப்பது? பேரிடர்களின் தீவிரத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்பது பற்றி சிந்தித்து செயல்பட வேண்டும்.

இவை அனைத்தும் நமக்கு உணர்த்துவது ஒன்றுதான் காலநிலை மாற்றம் என்பது மனித குலத்திற்கு பெரும் சவால், நம்முடைய இருத்தியலை கேள்விக்கு உட்படுத்தும் சவால்.. இந்த காலநிலை மாற்றமானது நம்முடைய இருத்தியலையே கேள்விக்குறி ஆக்கிக் கொண்டிருக்கிறது.

cyclone

மக்களாகிய நாம்தான் காலநிலை மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வுடன் செயல்பட்டு, அரசும் பெரும் நிறுவனங்களும் கொண்டுவரக்கூடிய சூழலுக்கு நாசப்படுத்தக்கூடிய  திட்டங்களுக்கு எதிராக குரலை உயர்த்தவேண்டும். தனிப்பட்ட முறையில் இந்த மாற்றத்தை, எப்படி கையாள்வது என்று சிந்திக்க வேண்டும். அப்படி சிந்திக்காவிட்டால் இனிவரும் காலங்கள் மனிதர்களுக்கு பெரும் துயரத்தைத் தரக்கூடியதாக இருக்கும். காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் நாம் ஒவ்வொருவரும் நம்மால் இயன்றதை செய்வோம் !

 

- Er.சுந்தர்ராஜன் – பூவுலகின் நண்பர்கள்