நாட்டில் பல பிரபலங்களுக்கு குறிப்பாக நடிகர்கள், அரசியல் துறை சார்ந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக்கின் குடும்பத்தில் அவரது மைத்துனருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். 

எனது மைத்துனர்,கொரோனாவால் காய்ச்சல்,மூச்சுத் திணறலுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 10 நாட்களில் முற்றிலும் குணமடைந்தார். எளிய இடம் ஆனால் சிறந்த மருத்துவ வசதி, சிகிச்சை, தரமான உணவு கிடைத்ததாம். அரசு மருத்துவர்களுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அரசு மருத்துவமனையில் அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படுவதால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைக்கு தயங்காமல் சென்று சிகிச்சை பெற்று கொள்ளவும் என நடிகர் விவேக் இந்த பதிவில் பரிந்துரை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடைசியாக தாராள பிரபு படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் விவேக். ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்த இந்த படம் பிரபல ஹிந்தி படமான விக்கி டோனார் படத்தின் தமிழ் ரீமேக்காகும். தான்யா ஹோப் நாயகியாக நடித்திருந்தார்.ஹீரோ பணத்திற்காக விந்தணுவை தானம் செய்பவர் என்பது தான் கதைக்கரு. கிருஷ்ணா மாரிமுத்து இந்த படத்தை இயக்கியிருந்தார். 

ஊரடங்கு காலத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகும் மீம்ஸ்கள் பற்றியும், மீம் கிரியேட்டர்களுக்கும் அறிவுரை கூறினார். அதைத்தொடர்ந்து கொரோனா நேரத்தில் மக்கள் மாஸ்க் அணியும் விதம் குறித்து சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் விவேக். உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்க பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்தியன் 2 மற்றும் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிவரும் அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்துள்ளார் விவேக். லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன், இந்த படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.