திரையுலகில் சின்ன கலைவாணராக திகழ்பவர் நடிகர் விவேக். 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட்டான விவேக், சினிமாவில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் மக்களுக்கும் சமூகத்திற்கும் நன்மை செய்யும் பல விஷயங்களை செய்து வருகிறார். குறிப்பாக அவர் மரம் நடுவதை பல வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறார். 

மரம் நடுங்கள், சுற்றுச் சூழலை காப்பாற்றுங்கள் என்று தான் அவர் சமூக வலைத்தளங்களில் மற்றும் மேடைகளில் தொடர்ந்து அவர் இளைஞர்களுக்கு அட்வைஸ் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விவேக் கடைசியாக தாராள பிரபு படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்த இந்த படம் பிரபல ஹிந்தி படமான விக்கி டோனார் படத்தின் தமிழ் ரீமேக்காகும். தான்யா ஹோப் நாயகியாக நடித்திருந்தார்.

கொரோனா நேரத்தில் மக்கள் மாஸ்க் அணியும் விதம் குறித்து சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் விவேக். உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்க பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்தியன் 2 மற்றும் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிவரும் அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்துள்ளார் விவேக். லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன், இந்த படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் நடிகர் விவேக் செய்த பதிவு, நெட்டிசன்களை சிந்திக்க வைத்துள்ளது. இருபது வருடத்திற்கு முன்பே விவேக் பனானா சேலஞ் செய்துள்ளார் என்று கூறி குஷி படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சியை பதிவு செய்திருந்தார். இதை பார்த்த விவேக், உங்கள் அன்புக்கு நன்றி... ஆனால்,பனானா சேலஞ் பாவக்கா சேலஞ் இதெல்லாம் வேண்டாம். சேலஞ்சும் வேண்டாம், ஒப்பிடவும் வேண்டாம்...முடிந்தவரை நல்லவை செய்வோம். இப்போதைக்கு பாடகர் SPB அவர்களின் உடல் நலனிற்கு பிரார்த்தனை செய்வோம் என்று பதிலளித்துள்ளார். படத்திலும் சரி, நிஜத்திலும் சரி... அப்போதைக்கு நடக்கும் நிகழ்வுகள் குறித்து பேசுவது, ரசிகர்களை சிந்திக்க வைப்பது போன்ற விஷயங்களை செய்வது சின்ன கலைவாணரின் வழக்கம். 

தனது குரலால் உலகையே வசப்படுத்தியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இசை பிரியர்களின் உலகமான எஸ்.பி.பி, சில நாட்கள் முன்பு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். தனக்கு கொரோனாவின் அறிகுறிகள் தீவிரமாக இல்லை என்றாலும் தான் குடும்பத்தாரின் நலன் கருதி மருத்துவமனைக்கு வந்ததாகவும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

இதனிடையே ஆகஸ்ட் 14-ம் தேதி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தது. அதில், உயிர்காக்கும் கருவிகளுடன் இருந்து வரும் அவரது உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் உள்ளது எனவும், மருத்துவ நிபுணர்களின் தீவிர சிகிச்சைக் கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.