தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடிகுழு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாமானார். முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். கடைசியாக ராம் குமார் இயக்கத்தில் வெளியான ராட்சசன் திரைப்படம், விஷ்ணுவின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து காடன், FIR, மோகன் தாஸ் போன்ற படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

லாக்டவுனில் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் விஷ்ணு, சமீபத்தில் தன் பிறந்தநாளை கொண்டாடினார். தற்போது இந்திய கிரிக்கெட் வீரர், கேரம் பால் வல்லுனர் என அழைக்கப்படும் ரவிச்சந்தர் அஸ்வினோடு நேர்காணலில் உரையாடியுள்ளார். இந்த DRS வித் ஆஷ் எபிசோடில், தனது திரைப்பயணம் பற்றியும், கிரிக்கெட் வாழ்க்கை பற்றியும் அதிகம் பகிர்ந்துகொண்டார் விஷ்ணு. 

அப்போது பேசியவர், நான் கிரிக்கெட்டை விட்டேன் என்று சொல்வதை விட.... கிரிக்கெட் தான் என்னை விட்டது என்று என்னைக்குமே கூறுவேன். இந்திய அணிக்கு விளையாடிவிடுவோம் என்ற எண்ணமெல்லாம் இருந்தது, முதுகு வலி இருந்த சமயம் அது, விளையாட்டில் 100 சதவீதத்தை என்னால் தர முடியவில்லை. சூழ்நிலையின் காரணமாக என்னுள் அதிகம் கேள்விகள் எழுந்தது. இது நமக்கு தேவையா ? இந்த மாதிரி கேள்விகள் வந்த பின் தான், வேற என்ன செய்வது என்று யோசித்த போது சினிமா ஆர்வம் வந்தது. என் பெரியப்பா சினிமா பிரியர் என்பதால், சினிமா ஆர்வம் என்னுள் நிறைந்தது. 

கிரிக்கெட்டை விட்டது ஏதோ பெரிய கனவை இழந்தது போல் இருந்தது. நடக்காது எனத் தெரிந்தவுடன் சாஃப்டுவேர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். அதன் பிறகு தான் வெண்ணிலா கபடிகுழு வாய்ப்பு வந்தது என பேசியுள்ளார் விஷ்ணு. திரை ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும் விஷ்ணு விஷால் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று. நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் விஷ்ணு மற்றும் விக்ராந்தின் ஓப்பனிங் பேருக்கு ரசிகர்கள் ஏராளம். 

அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் எஃப்.ஐ.ஆர் படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். கருணாகரன் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், அஷ்வந்தின் இசையில் உருவாகும் எஃப்.ஐ.ஆர் படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். டீஸர் ஏற்கனவே வெளியானது. சமீபத்தில் யார் இந்த இர்ஃபான் அஹ்மத் என்ற ப்ரோமோ வீடியோவை வெளியிட்டது படக்குழு. 

விஷ்ணு விஷால் நடிப்பில் மோகன்தாஸ் படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை முரளி கார்த்திக் இயக்க, விஷ்ணு விஷால் தயாரிக்கவிருக்கிறார். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி கேஎஸ் இசையமைக்கிறார். 

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள காடன் திரைப்படம் கொரோனா காரணமாக தள்ளிப்போனது. இதைத்தொடர்ந்து இயக்குனர் வசந்த பாலன் இயக்கவிருக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார் விஷ்ணு.