வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகர் விஷ்ணு விஷால் அவ்வளவு எளிதில் இந்த இடத்திற்கு வந்து விடவில்லை. ஆரம்பத்தில் கிரிக்கெட்டராக ஜொலிக்க விரும்பிய விஷ்ணு விஷால் 10 வருட கடின உழைப்புக்கு பிறகு தான் எதிர்பார்க்கிறாத தோல்வியை கிரிக்கெட்டில் சந்தித்து இனி கிரிக்கெட்டே வேண்டாம் என விலகி வந்தார்.

அதே போல் திரை உலகிலும் 6 வருட காத்திருப்பிக்கு பின் வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன், FIR என ஹிட் படங்கள் கொடுத்து தற்போது முன்னணி கதாநாயகராக உயர்ந்துள்ளார். முன்னதாக விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கட்டாக்குஸ்து திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக லால் சலாம் படத்தில் நடிக்கிறார்.

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் லால்சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க முக்கியமான கௌரவ தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதனிடையே நமது கலாட்டா சேனலில் நடைபெற்ற விஷ்ணு விஷால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் விஷ்ணு விஷால் தனது பயணம் குறித்த சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது பேசுகையில், “கிரிக்கெட் இல்லை என மிகுந்தமான வருத்தத்தில் இருந்த சமயத்தில் ஒரு நாள் இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது என நண்பன் அழைத்ததால் வேண்டா வெறுப்பாக சென்றேன். அந்த போட்டியில் ராபின் உத்தப்பா களமிறங்கினார். அவர் எனது ஜூனியர். அவர் சிக்ஸ் அடித்ததும் நான் ஆட வேண்டிய இடம் நான் என்னடா இங்கே இருக்கிறேன் என நடந்து சென்று உட்கார்ந்தேன். சோகமாக மேட்சை பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னால் ஒரே சத்தம் திரும்பிப் பார்த்தால் ரஜினிகாந்த் சார் குடும்பத்தோடு வந்திருக்கிறார். முன்னாடி கிரிக்கெட் 10 வருட தோல்வி… பின்னால் சினிமா ஆறு வருட தோல்வி… நடுவில் ஒரு தோல்வியாகவே அமர்ந்து இருந்தேன். வீட்டிற்கு சென்று கதறி அழுதேன். ஆனால் இப்போது மீண்டும் கிரிக்கெட்டராக லால் சலாம் படத்தில் நடிக்கிறேன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன்” என மிகுந்த மகிழ்ச்சியோடு தனது வெற்றி பயணத்தை பகிர்ந்து கொண்டார். நடிகர் விஷ்ணு விஷாலின் இந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.