விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை புரட்சி தளபதி விஷால் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் பல படங்களைத் தயாரித்துள்ளார். இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண் கணக்காளர் ரம்யா மீது விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் பணம் கையாடல் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக விஷால் தயாரிப்பு நிறுவனம் எனப்படும் VFF அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், எங்கள் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்த ரம்யா என்பவர், நிறுவனத்தில் பல வருடங்களாக வங்கிக் கணக்குகளை முறைகேடாகப் பயன்படுத்தி ரூ.45 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார் என்பது கண்டறியப்பட்டு, 30.6.2020 அன்று புகார் அளிக்கப்பட்டு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மோசடி தொடர்புடைய பிரிவின் கீழ் 7.7.2020 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.

எனவே, ரம்யா இனி எங்கள் நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரியில் பணியாற்றவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் கணக்குத் தொடர்பான எந்த விஷயங்களிலும் இனிமேல் ரம்யாவை யாரும் தொடர்புகொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மீறி தொடர்பு வைத்துக்கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு விஷால் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் சக்ரா படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். ட்ரைலர் காட்சிகளை பார்க்கையில் டிஜிட்டல் உலகில் நடக்கும் திருட்டு குறித்த கதை போல் தெரிகிறது. 

ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சமீர் முகமது படத்தொகுப்பு செய்கிறார். ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பற்றிய பின்னணியுள்ள கதையாக உருவாகி வருகிறது இந்த படம். படத்தின் ஷூட்டிங் முழுவதும் சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் நடத்தப்பட்டது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. விரைவில் இதன் ரிலீஸ் தேதி தெரியவரும். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் விஷால் ரசிகர்கள். இந்த படத்தை தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கவுள்ளார் விஷால்.