செல்லமே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் விஷால்.தொடர்ந்து இவர் நடித்த சண்டக்கோழி,திமிரு,தாமிரபரணி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.ஆக்ஷன் கலந்த குடும்ப படங்களான இவை ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து தமிழகம் முழுவதும் பிரபலமான நட்சத்திரமாக விஷால் வளர்ந்தார்.

இதனை தொடர்ந்து இவர் நடித்த பாண்டியநாடு,நான் சிகப்பு மனிதன் ,பூஜை,கதகளி,துப்பறிவாளன்,இரும்புத்திரை என்று ஹிட் படங்களில் நடித்து அசத்தினார் விஷால்.கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான அயோக்யா திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.சன் டிவியில் ஒளிபரப்பான நாம் ஒருவர் என்ற நிகழ்ச்சியை விஷால் தொகுத்து வழங்கினார்.

நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆகவும்,தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வந்தார் விஷால்.நடிகர் சங்கத்தின் எலெக்ஷன் முடிந்து இன்னும் முடிவுகள் வெளிவராமல் உள்ளன.திரைப்படங்கள் திருட்டுத்தனமாக ஆன்லைன் மற்றும் சிடிகளில் வெளியாவதை கண்காணிக்கவும் அதனை தடுக்கவும் anti-piracy யூனிட் ஒன்றையும் தீவிரமாக விஷால் நடத்தி வந்தார்.இதனை தவிர 2017 ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடவிருந்தார் ஆனால் சில காரணங்களால் இவரின் நாமினேஷன் நிராகரிக்கப்பட்டது.

படங்களில் நடிப்பது மட்டுமின்றி விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் படங்களை தயாரிக்கவும்,விநியோகமும் செய்து வந்தார்.தன்னுடைய படங்கள் மட்டுமின்றி பிற நடிகர்களின் படங்களையும் தயாரித்து,விநியோகம் செய்து வந்தார் விஷால்.கே.ஜி.எப் படத்தின் முதல் பாகத்தை தமிழில் வெளியிட்டது விஷால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் ஹரி தற்போது காவல்துறையில் ஒரு புகார் அளித்துள்ளார்.அந்த தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்த பெண் ஒருவர் ரூ.45 லட்சம் மோசடி செய்திருக்கலாம் என்று வடபழனியில் புகார் அளித்துள்ளார்.இந்த கேஸ் விருகம்பாக்கம் காவல்துறையினருக்கு அனுப்பப்பட்டு அந்த பெண்ணிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்ற  தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த கூடுதல் தகவல்கள் அடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.