தமிழ் திரை உலகின் மிக முக்கிய கலைஞர்களில் ஒருவர் சின்ன கலைவாணர் விவேக். உதவி எழுத்தாளராக இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களிடம் பணிபுரிய வந்த விவேக் மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 33 வருடங்களாக பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னனாக நம் மனதை ஆள்கிறார்.

நகைசுவைக்காக பல விருதுகளை வாங்கிக் குவித்த சின்ன கலைவாணர் விவேக், தனது ஒவ்வொரு திரைப்படங்களிலும் ஒவ்வொரு வசனங்களிலும் நகைச்சுவை மட்டுமல்லாது பல சமூக கருத்துக்களையும் பகுத்தறிவையும் திகட்டாமல் வழங்கியவர்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் உலகின் தலைசிறந்த விஞ்ஞானியுமான மறைந்த, உயர்திரு. அப்துல்கலாம் அவர்களின் கனவாக தமிழகத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணியை தன் நெஞ்சில் சுமந்து செவ்வனே செய்து வந்த நடிகர் விவேக் இதுவரை 33 லட்சத்திற்கும் மேலான மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி சின்ன கலைவாணர் விவேக்கின் உடலும் உயிரும் நம்மை பிரிந்தது. இந்த பிரிவை இன்னும் தமிழ் ரசிகர்களின் மனம் ஏற்க மறுக்கிறது. இந்நிலையில் சின்ன கலைவாணர் விவேக் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக வெள்ளித்திரை மற்றும் சின்ன திரையுலகினர் ஒன்றிணைந்துள்ளனர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள சின்ன கலைவாணர் விவேக் என்னும் இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சி வருகிற (ஆகஸ்ட் 29) ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அந்தவகையில் இந்நிகழ்ச்சியின் முன்னோட்டமாக புதிய ப்ரோமோ வீடியோக்கள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ப்ரோமோ வீடியோக்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.