தமிழ் திரையுலகில் பிஸியாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. இவர் நடிப்பில் பல படங்கள் தயாராகி வருகின்றன. லாபம், கடைசி விவசாயி, க/ பெ ரணசிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்த கொரோனா லாக் டவுன் நேரத்தில் அவர் எந்த படங்களிலும் பணியாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் வீட்டிலேயே குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் லைவ்வில் தோன்றி, தன் திரை அனுபவம் பற்றியும், நடிக்கும் படங்கள் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார். 

நேற்று துக்ளக் தர்பார் படத்தின் போஸ்டர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. அந்த போஸ்டரில் விஜய் சேதுபதி டேபிளுக்கு முன் அமர்ந்திருப்பது போலவும், அந்த டேபிளில் தெரியும் பிரதிபலிப்பு வேறொரு விஜய் சேதுபதி போல காட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரம் பற்றிய சில குறிப்புகள் அந்த போஸ்டரில் இடம் பெற்றிருக்கலாம் என தெரிகிறது. தற்போது படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த கதையாக இருக்கும் என்று தெரிகிறது. கட்சி கொடி கொண்ட வேட்டி சட்டை என கேரக்டரில் கச்சிதம் காண்பித்துள்ளார் விஜய்சேதுபதி. 

இந்த படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் என்கிற அறிமுக இயக்குனர் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதியுடன் பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷுட்டிங் சென்ற வருடமே பூஜையுடன் துவங்கி நடைபெற்று வந்தது. 

விஜய் சேதுபதி இதில் அரசியல்வாதியாக நடிக்கிறார் என்றும் அவருக்கு மாஸான காட்சிகள் நிறைய இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இயக்குனர் டெல்லி பிரசாத் இதற்கு முன்பு பல இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளார். பாலாஜி தரணிதரன், பிரேம்குமார் உள்ளிட்ட பல இயக்குனர்கள் உடன் அவர் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.மனோஜ் பரமஹம்சா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.

எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய லாபம் மற்றும் வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்கத்தில் உருவான யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்கள் விஜய் சேதுபதியின் ரிலீஸ் பட்டியலில் உள்ளது. லாக்டவுனுக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.