தமிழ் திரையுலகின் மக்கள் செல்வனாக திகழ்பவர் விஜய் சேதுபதி. அன்று சீனுராமசாமி கண்டெடுத்த பொக்கிஷம், இன்று திரைத்துறையின் கௌரவம்... என போற்றப்படும் நாயகன். கமர்சியல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும், வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் குறை வைக்காமல் அசத்தி வருகிறார் விஜய் சேதுபதி. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பை காண ஆவலாக உள்ளார் அவரது ரசிகர்கள். XB பிலிம்ஸ் தயாரித்த மாஸ்டர் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. 

மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி, சீனு ராமசாமியின் மாமனிதன், எஸ்.பி. ஜனநாதனின் லாபம், விருமாண்டியின் க.பெ. ரணசிங்கம், வெங்கட கிருஷ்ணா ரோகந்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர், அல்லு அர்ஜூனுடன் புஷ்பா, அமீர்கானுடன் லால் சிங் சத்தா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் விஜய் சேதுபதி கைவசம் உள்ளது. 

நேற்று பிரபல மீடியாவிற்கு லைவ்வில் தோன்றியவர், தான் நடித்துள்ள படங்கள் பற்றியும், நடிக்கவிருக்கும் படங்கள் பற்றியும் பேசினார். மேலும் தான் நடித்த படங்களிலேயே ஆரஞ்சு மிட்டாய் திரைப்படம் தான் தனக்கு மிகவும் நெருக்கமான படம் என்பதை தெரிவித்தார். என் தந்தையை நினைத்து தான் அந்த கேரக்டரை எழுதினேன். படத்தில் அவருடைய புகைப்படத்தை பயன்படுத்தி கொண்டேன். படத்தில் அவர் போல் நடந்து கொண்டேன். என் தந்தை திடீரென டான்ஸ் ஆடுவார். அதே போல் படத்தில் ஒரு காட்சியை அமைத்தேன். இதுதவிர்த்து அனைத்து படங்களும் என்னுடயை ஃபேவரைட் தான் என்று பேசியுள்ளார் விஜய் சேதுபதி.