மக்கள் விரும்பும் மக்கள் செல்வனாக திகழ்பவர் விஜய் சேதுபதி. கமர்சியல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும், வில்லன் ரோல், வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் குறை வைக்காமல் அசத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இந்த லாக்டவுனில் இயக்குனர் நலன் குமாரசாமியுடன் இணைந்து புது ஜானரில் ஒரு ஹேங்கவுட் படத்தில் நடிக்கவுள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பை காண ஆவலாக உள்ளார் அவரது ரசிகர்கள். XB பிலிம்ஸ் தயாரித்த மாஸ்டர் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார் விஜய்சேதுபதி. 

சமீபத்தில் துக்ளக் தர்பார் படத்தின் அண்ணாத்தே சேதி பாடல் வெளியானது. டெல்லி பிரசாத் தீனதயாளன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இது தவிர்த்து மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி, சீனு ராமசாமியின் மாமனிதன், விருமாண்டியின் க.பெ. ரணசிங்கம், வெங்கட கிருஷ்ணா ரோகந்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர், அல்லு அர்ஜூனுடன் புஷ்பா, அமீர்கானுடன் லால் சிங் சத்தா போன்ற படங்கள் விஜய் சேதுபதி கைவசம் உள்ளது. 

சில நாட்கள் முன்பு லாபம் படத்தின் டப்பிங் பணிகளை முடித்து விட்டார் நடிகர் விஜய்சேதுபதி. பாதுகாப்பான முறையில் ஸ்டுடியோவில் முகக்கவசம் அணிந்தபடி படக்குழுவினர் டப்பிங் பணிகளை செய்துள்ளனர். ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாகவும், ஜகபதி பாபு, சாய் தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

இந்நிலையில் குழந்தையுடன் விளையாடும் விஜய்சேதுபதியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த குழந்தை விஜய்சேதுபதியின் ரசிகரின் குழந்தையா அல்லது உறவினரின் குழந்தையாக இருக்குமோ என்று கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்து வருகிறார் விஜய்சேதுபதி.