வேல்ஸ் நிறுவனம், 4 முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து ஆந்தாலஜி பாணியில் படமொன்றைத் தயாரித்து வருகிறது. காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு குட்டி லவ் ஸ்டோரி என்று பெயரிட்டுள்ளனர். இதில் உள்ள 4 கதைகளை கெளதம் மேனன், வெங்கட் பிரபு, விஜய் மற்றும் நலன் குமாரசாமி ஆகியோர் இயக்கியுள்ளனர். இந்தப் படம் தொடர்பான ப்ரமோ வேல்ஸ் நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் ஏற்கனவே வெளியானது. 

இந்நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இந்த போஸ்டரில் கெளதம் மேனன், அமலா பால், அமிதாஷ் பிரதன், மேகா ஆகாஷ், விஜய் சேதுபதி, அதிதி பாலன், வருண், சாக்ஷி அகர்வால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பிப்ரவரி 12-ம் தேதி திரையரங்கில் இந்த ஆந்தாலஜி படம் வெளியாகவுள்ளது. 

வெங்கட் பிரபு தற்போது சிம்பு வைத்து மாநாடு படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அரசியல் மாநாடு நடைபெறும் கூட்டத்தில் கையில் துப்பாக்கியோடு செல்கிறார் சிலம்பரசன். அதன் பின் கட்சி கூட்டத்தில் குண்டு வெடிப்பது போன்ற காட்சி மோஷன் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. மோஷன் போஸ்டரில் இடம்பெற்ற யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை ரசிகர்களின் இதயத்தை அதிர வைக்கிறது. 

விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ள திரைப்படம் தலைவி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. சமீபத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. 

காதலும் கடந்து போகும் படத்திற்கு பிறகு நலன் இயக்கிய இந்த படைப்பை காண மிகுந்த ஆவலில் உள்ளனர் திரை விரும்பிகள். இதில் விஜய் சேதுபதி ஜோடியாக அதிதி பாலன் நடித்துள்ளார்.