குறும்படங்களில் துவங்கி 2013-ம் ஆண்டு வெளியான படம் சூது கவ்வும் படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் நலன் குமாரசாமி. சி.வி.குமார் தயாரிப்பில் வெளியான சூது கவ்வும் திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. சினிமா ஃபார்முலாக்களை மாற்றியது என்றே கூறலாம். கோலிவுட்டில் டார்க் காமெடி பாணியை கொண்டு படம் வரலாம் என்று இந்த படம் நிரூபித்தது. இதில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரமேஷ் திலக், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி மற்றும் நலன் குமாரசாமியின் கூட்டணியில் திரைக்கு வந்த படம் காதலும் கடந்து போகும். ரசிகர்களின் பார்வையிலும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரசிகர்களின் ஃபேவரைட் படங்களில் ஒன்றாக திகழ்கிறது. 

சூப்பர் டீலக்ஸ் படத்தில் திரைக்கதை எழுதிய நலன் குமாரசாமி, அடுத்ததாக ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கவுள்ளார். லாக்டவுன் நாட்களை வீணடிக்க வேண்டாம் என்று புதிய யோசனையுடன் விரைந்துள்ளார் நலன். சமீபத்தில் மீண்டும் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்க விருப்பப்படுவதாக விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அவர் பேசுகையில், ஒரு மாதத்துக்கு முன்பு நலன் குமாரசாமியிடம் பேசினேன். சூது கவ்வும் படம் பண்ணும் போது புரியவே இல்லை. அவரிடமே அந்தப் படம் புரியாமலேயே நடித்தேன் என்று சொன்னேன். கதை பிடித்திருந்தது, ஆனால் கேரக்டர் புரியவே இல்லை என்று கூறினார். 

தற்போது இந்த காம்போ மீண்டும் இணைகிறது என்ற செய்தி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. லாக்டவுனில் இருவரும் இணையும் குறும்படமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. விஜய்சேதுபதி மற்றும் நலன் பேச்சுவார்த்தையில் இருப்பதால், கதை மற்றும் ஜானர் பற்றிய விவரம் இன்னும் தெரியவில்லை. விரைவில் இதுகுறித்த சுவையூட்டும் அப்டேட் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பை காண ஆவலாக உள்ளார் அவரது ரசிகர்கள். XB பிலிம்ஸ் தயாரித்த மாஸ்டர் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார் விஜய்சேதுபதி. 

சமீபத்தில் துக்ளக் தர்பார் படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியானது. டெல்லி பிரசாத் தீனதயாளன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இது தவிர்த்து மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி, சீனு ராமசாமியின் மாமனிதன், எஸ்.பி. ஜனநாதனின் லாபம், விருமாண்டியின் க.பெ. ரணசிங்கம், வெங்கட கிருஷ்ணா ரோகந்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர், அமீர்கானுடன் லால் சிங் சத்தா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் விஜய் சேதுபதி கைவசம் உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.