மக்களை தன் நடிப்பால் ஈர்த்து மக்கள் செல்வனாக ஜொலிப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. இவர் நடிப்பில் பல படங்கள் தயாராகி வருகின்றன. லாபம், கடைசி விவசாயி, க/ பெ ரணசிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சில தினங்கள் முன் துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. 

இந்த கொரோனா லாக்டவுன் நேரத்தில் அவர் எந்த படங்களிலும் பணியாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் வீட்டிலேயே குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் லைவ்வில் தோன்றி, தன் திரை அனுபவம் பற்றியும், நடிக்கும் படங்கள் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார். 

இலங்கையை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு 800 என்கிற பெயரில் படமாகிறது. இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தகவல் வெளியாகி தீயாக பரவியது.

இந்நிலையில் விஜய் சேதுபதி அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இப்படம் பற்றி பேசியுள்ளார். அதில், 800 படத்தில் நான் நடிப்பது நிச்சயம். நான் கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பது கூட இல்லை. எனக்கு கிரிக்கெட்டை பார்த்தால் போர் அடிக்கும். சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பது இல்லை. சொல்லப் போனால் இதை தான் முத்தையா முரளிதரனிடம் கூறினேன். அதற்கு அவரோ, என் கதாபாத்திரத்தில் நடிக்க இது தான் சிறந்த தகுதி என்று கூறினார். 

800 படத்தில் நடிக்க நான் என் உடல் எடையை குறைத்துக் கொண்டிருக்கிறேன். இதற்காக சிறப்பு பயிற்சியாளர் ஒருவரை நியமித்துள்ளேன். ஆனால் தற்போதுள்ள சூழலில் ஏற்படும் மன அழுத்தத்தால் வெயிட்டை குறைக்க முடியுமா என்று தெரியவில்லை. தற்போதைய சூழலில் நான் நிறைய சாப்பிடுகிறேன் என்றார். ராணா தயாரிக்கும் 800 படத்தை எம்.எஸ். ஸ்ரீபதி இயக்குகிறார். 

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. கொரோனா வைரஸ் பிரச்சனையால் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது. அந்த படத்தில் தான் கொடூரமானவாக, துளி கூட நல்லவன் இல்லாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக விஜய் சேதுபதி அண்மையில் தெரிவித்தார். மாஸ்டர் படத்தின் அப்டேட் ஏதாவது கிடைக்காதா என்று ஏங்கிய ரசிகர்களுக்கு விஜய் சேதுபதி கூறிய விஷயம் சுவையூட்டும் வகையில் அமைந்தது. 

இதுதவிர்த்து வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்கத்தில் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்துள்ளார். லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் இந்த லாக்டவுனிலே நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.