மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்து 2018-ல் வெளிவந்த படம் 96. தமிழ் சினிமா கண்ட காதல் காவியங்களில் இதுவும் ஒன்று. இந்த படத்தின் மூலமாக பிரேம்குமார் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு முன்பாக நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார். இந்த படம் அவருக்கு மாபெரும் அடையாளத்தை தந்தது. 

பள்ளி பருவ காதல், அதன் பிறகு பிரிவு, மற்றும் பல வருடங்கள் கழித்து பள்ளி மாணவர்கள் ரீயூனியன் விழாவில் ஹீரோ ராம் மற்றும் ஹீரோயின் ஜானு இருவரும் சந்திக்கும் போது அவர்களுக்கு இடையில் நடக்கும் விவாதம் தான் 96 படத்தின் கதையாக இருந்தது. மாடர்ன் சினிமா ட்ரெண்டில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக காதலர்கள் இதை கொண்டாடினார்கள். 

தமிழை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னடத்தில் ரீமேக் செய்தனர். தெலுங்கு ரீமேக் படம் ஜானு என்ற பெயரில் உருவானது. அதில் சமந்தா மற்றும் ஷர்வானந்த் ஆகியோர் நடித்திருந்தனர். அதையும் பிரேம் குமார் தான் இயக்கியிருந்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் தமிழில் ஓடிய அளவிற்கு ஓடவில்லை. 

90 திரைப்படத்தின் மிகப்பெரிய தூணாக இருந்தவர் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா. முதல் படத்திலேயே பல கோடி இசை பிரியர்களை ஈர்த்தார். தற்போது இவர் இசையில் படத்தின் மெட்லி வெர்ஷன் வீடியோ வெளியானது. ராஜன் KS இதை மிக்ஸ் செய்துள்ளார். விஜய் எம் ராகவன் எடிட்டிங் செய்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி தற்போது ட்ரெண்டாகி வருகிறது. திங்க் மியூசிக் நிறுவனம் இதை வெளியிட்டுள்ளது. படத்தில் வந்த காட்சிகளை வைத்தே இந்த பாடல் உருவானது குறிப்பிடத்தக்கது.