தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து வரும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிகராகவும் அசத்தி வருகிறார். பல படங்களில் நடிகராக கலக்கி வரும் விஜய் ஆண்டனி தற்போது நடிகர்,தயாரிப்பாளர்,படத்தொகுப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருகிறார். 

அடுத்தடுத்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குனராகவும் களமிறங்குகிறார். முன்னதாக இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் மற்றும் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் கிரைம் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியிருக்கும் கொலை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

மேலும் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் தமிழரசன், இயக்குனர் A.செந்தில்குமார் இயக்கத்தில் காக்கி மற்றும் மூடர் கூடம் பட  இயக்குனர் நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள் என வரிசையாக திரைப்படங்கள் விஜய் ஆண்டனி நடிப்பில் விரைவில் வெளிவர தயாராகி வருகின்றன. இதனிடையே  தமிழ் படம் படத்தின் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் புதிய படத்திலும் நடித்து வருகிறார் . 

விஜய் ஆன்டணியின் கோடியில் ஒருவன் மற்றும் கொலை ஆகிய படங்களைத் தொடர்ந்து 3-ஆக விஜய் ஆண்டனி நடிக்கும் இந்தத் திரைப்படத்தையும் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது.  பிச்சைக்காரன் சைத்தான் எமன் கொலை இந்த வரிசையில் விஜய் ஆண்டனியின் புதிய படத்திற்கு ரத்தம் என பெயரிடப்பட்டுள்ளது. மிரட்டலான ரத்தம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ...