வித்யா பாலனின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சகுந்தலா தேவி. கணித மேதை சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு படமான இந்த படம் 2020 ஜூலை 31-ம் தேதி வெளியாகவுள்ளது. OTT இயங்குதளம் மற்றும் அமேசான் பிரைமில் வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. சமீபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியானது. 

தற்போது இந்த படத்திலிருந்து பாஸ் நஹி தோ ஃபெயில் நஹி பாடல் வீடியோ வெளியாகி இணையத்தை ஈர்த்து வருகிறது. சுனிதி சவுஹான் பாடிய இந்த பாடல் வரிகளை வாயு எழுதியுள்ளார். சச்சின் ஜிகார் இசையமைத்துள்ளார். அனு மேனன் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் ஜிசு செங்குப்தா மற்றும் அமித் சாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

அனு மேனன் மற்றும் நயநிகா மஹ்தனி இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். இஷிதா மொய்த்ரா வசனங்களை எழுதியுள்ளார். சன்யா மல்ஹோத்ரா மகள் வேடத்தில் நடித்திருக்கிறார். கணித மேதை என்று போற்றப்படும் சகுந்தலா தேவி மனித கால்குலேட்டர் என்று அழைக்கப்படுபவர். நொடிப் பொழுதில் மிகவும் சிக்கலான கணக்கையும் மன கணக்காக போடும் திறமை அவரை உலகறிந்த கணித நிபுணராக உயர்த்தியது. 

கணிதத்தில் அவரது திறனும் ஆளுமையும் 1982 ஆம் ஆண்டின் தி கின்னஸ் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸின் பதிப்பில் அவருக்கு குறிப்பிடத்தக்க இடத்தை தந்தது. இந்திய கணிதத்துறை பல முன்னோடிகளைக் கொண்டிருந்தாலும், அதில் பெண்களின் பிரதிபிம்பமாக சர்வதேச அளவில் ஜொலிப்பவர் கணிதமேதை சகுந்தலா தேவி மட்டும் தான். கணித மேதை சகுந்தலா தேவி கர்நாடக மாநிலத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். தந்தையுடன் மூன்று வயதில் பொழுதுபோக்காக சீட்டு விளையாடும்போது குழந்தை சகுந்தலாவின் கணிதத் திறமை வெளிச்சத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தை தொடர்ந்து ஷெர்னி என்ற படத்தில் நடிக்கவுள்ளார். அமித் இந்த படத்தை இயக்கவுள்ளார். கடந்த ஆண்டு மிஷன் மங்கள் படத்திலும் அசத்தியிருந்தார் வித்யா பாலன். தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் தல அஜித்தின் ஜோடியாக நடித்திருந்தார். வினோத் இயக்கிய இந்த படத்தை போனி கபூர் தயாரித்தார். கடந்த ஆண்டு வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.